திங்கள், 22 மார்ச், 2010

Blogs:மைய்யம் கரைந்த இலக்கியம் (Decentralized Literature)

இலக்கியம் அதற்கான குறியீடுகளை, படைப்பாளியின் பார்வை மற்றும் அனுபவங்களின் வழியே தன்னை சமைக்கிறது. இலக்கியம் தன்னைத் தானே நிகழ்த்திக்கொள்ளும் ஒரு களமாக படைப்பாளி உதவுகிறான். அந்த களத்தின் பண்புகள், விருப்பு வெறுப்பு, தீர்ப்பு, அறியாமை அனைத்தும் இலக்கியத்தின் கூறுகளாகி வாசிப்பவனின் எண்ணஓட்டத்திற்கேற்ப தன் பாதிப்பை நிகழ்த்திச்செல்கிறது. உணரப்படும் இலக்கியம், எடுத்தாளப்பட்டு, வடிவமாய் சமைவதில் படைப்பாளியே அதன் முதல் பார்வையாளனுமாகிறான்.

படைப்பாளியின் ego படைப்பின் வழி தெளிவாக அல்லது திட்டமிட்டு இறக்கிவைக்கப்பட்டு, இலக்கிய புனிதபிம்பங்கள் அரசியற்தந்திரத்திடனும் பிரச்சார சுற்றுக்கு விடப்படுகிறது. இலக்கிய ஆளுமை மற்றும் அவ்வாளுமையின் படைப்பு இரண்டும் மெல்ல மெல்ல தனக்கான மைய்யத்தை நிறுவிவிடுகிறது. பிம்பக் கட்டுடைப்புகள், அந்த மைய்யத்தை குறிவைத்தே தன் ஆயுதங்களை எறிகிறது.

Critics shatter the axis-the ego. படைப்பின் egoவை தூளாக்குவதன் மூலம் படைப்பாளியை நிர்மூலமாக்குகிறது எதிர் வாதங்கள். எப்பொழுதும் இவை சாத்தியமாகிவிடுவதில்லை. எதிர்ப்புகளை சீரணித்து, அல்லது அதையே தன் egoவை வளர்க்கும் செறிவூட்டப்பட்ட உணவாக மாற்றி மேலும் மேலும் படைப்பாளுமை தன் மைய்யத்தை, அதன் அடர்த்தியை அதிகரிப்பதும் நிகழ்கிறது. படைப்பும், ஆளுமையும், பின் தொடர்பவர்களும் அந்த மைய்யத்தை நிறுவிட்ட போதையிலையே இறுமாப்படைகின்றனர். இதுநாள் வரை இதுவே இலக்கிய பெருமையின், படைப்பாளுமையின் பரிசாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால், பதிவுலகின் வருகைக்குபின், இலக்கியவெளிப்பாட்டிற்கான தளம் வேறாகிவிட்டது. இது மைய்யம் கரைந்த படைப்புவெளி. Decentralized Platform. ஒரு மாயச்சூழல் அல்லது வெவ்வெறு ஆரங்களில் சுழலும் முடிவற்ற சுருள்பாதை. இதோ, அதோ என்று எந்த படைப்பாளுமையின் நிழலிலும் ஓய்வெடுத்து, போற்றி புகழ்ந்து, மைய்யத்தின் அடர்த்தியில் பிரச்சார துண்டு சீட்டுகளை விற்பனைக்கு விடுவது இயலாத ஒரு செயலாகிவிடுகிறது. வெவ்வெறு இசம் அல்லது பரிமாணம் என்ற அளவில் திரிந்து நின்ற இலக்கியம் இன்று தளவேறுபாட்டின் சூழலில், தன் ஆளுமையை முழுமையாக நிர்மாணிக்க, அல்லது குவித்து வைக்க இயலாததாய் துணுக்குற்றுக்கிடக்கிறது.

பிரதான ஆளுமை என மார்தட்டிய மைய்யங்கள், நாளொன்றாய் கிளம்பும் வெவ்வெறு படைபாளுமைகளின் நெருக்குதலில் மிகவும் நிர்வாணமாய் பாதுகாப்பின்றி உணர்கின்றது. தன் சார்பு தளங்களை அல்லது தத்துவ தேடல்களை முன்வைப்பதில் பெரும் பின்னடைவை சந்திக்கிறது. ஏனெனில் அனைத்து சார்பு தளங்கள், தத்துவங்கள் ஏதாவது ஒரு புள்ளியில் தோலுரிக்கப்பட்டு பரிகசிக்கபப்டுகிறது, ஆளுமையின் மைய்ய அடர்த்தி மறுபடி தாக்குதலுக்குள்ளாகி, புறமுதுகிட்ட பேரரசன் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.

தகவல், அனுபவம், தேடல், சார்பு, தத்துவம், மொழி, கதை, படைப்பு, படைப்பாளி, பார்வையாளன் என அனைவரும் இயங்குதள நிலையாமையின் வெப்பத்தை உணரத்துவங்கிவிட்டனர். புதுமைப்பித்தனோ, குபரா’வொ, கரிச்சான்குஞ்சோ, நாபி’யோ இறூமாந்து திரிந்த படைப்பு தளங்களும், கால அளவுகளு இனி வரும் படைப்பாளுமைகளுக்கு எட்டாக்கனியே. பதிவுலம் அந்த மைய்யமற்ற வெளியின் நீள அகலங்களை நாளுக்கு நாள் புரட்டிப்போட்டபடியே தன்னையும் சுய அழிவிற்கு உட்படுத்துகிறது.

Decentralized இலக்கியம், முகமற்ற படைப்பாளுமைகளின் மைய்யமற்ற தளங்களில் உருக்கொண்டு, முழுக்க முழுக்க இலக்கியம் இலக்கியத்திற்கான, நினைவின் அடுக்குகளில் தெளிவற்ற அனுபவங்களை அடுக்கிச்செல்லும் நிகழ்வாகவே அமையும். புனிதபிம்பங்கள், நெம்புகோல் படைப்புகள், தீவிர ஆளுமை, தவிர்க்க முடியா ஆளுமைகள் என்ற முத்திரைகள் விற்கப்படும் கடைகள் மூட்டையை கட்டவேண்டியதும் காலத்தின் நியதியாகிவிடும் - விட்டது.

இந்தச்சூழலில் தீவிர மனோபாவத்துடன் அல்லது ஆழ்ந்து அனுபவித்து முன்வைக்கப்படும் படைப்புகள் விரல்விட்டு என்னக்கூடியவையாக அல்லது எண்ணிறைந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது. A Polarized creative world. போலச்செய்தல் அல்லது பாவித்தல் வெகுவிரைவாக -நொடிகளில் நிகழ்வாய்ப்பிருப்பதால், எங்கும் ஒரே மாதிரியான அனுபவங்களை அல்லது முடிவான படைப்புகளை கண்ணுறும் கடுப்பான ஒரு நிலைக்கு வாசகர்களை தள்ளுவதும் Decentralized Literature'ன் பண்பாக இருக்கும்.

ஆளுமைகளின் Underwearகளை துவைத்து காயப்போட ஆயிரக்கணக்கில் வலைப்பக்கங்கள் இருக்கும். சுனாவுடன் ஜி-சாட்டில் கதைத்த பொழுதொன்றில் முதல், எனது முதல் மின்னஞ்சல் வரை ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை பகிரப்படுவதில், நீங்களும் ஒரு வாசகன் - நீங்களும் ஒரு ஆளுமை - நீங்களும் ஓரிடத்தில தூற்றப்பட்டு மற்றொரு பக்கத்தில் புகழப்பட்டு - ஒரு சில ஆளுமைகளே குப்பை கொட்டி, குசுவிட்டுத் திரிந்த படைப்புவெளி இனி அனைத்து வலைஞர்களுக்கும் கிட்டும். இந்த நொடியில் இந்தப் பதிவை கிழித்து தோரணம் கட்ட முடிவெடித்துக்கொண்டிருக்கும் உங்கள் குரூரபுன்னகைக்கு ஒரு வணக்கம். Bro, Welcome to the Blog literature - The Decentralized Zone!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக