சனி, 1 ஆகஸ்ட், 2009

கலித்தொகை - ஓடிப்போன மகள் - தேடும் தாய்

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று, சங்க இலக்கியம். சீரற்ற அடிகளில் சற்றே பெரிய பாடல்களாய் 150 காதல் பாடல்கள். திணைக்கு முப்பது பாடல்களாய், ஐந்து திணைக்கு 150 பாடல்கள். அனைத்துமே காதலின் பல்வேறு பரிமாணங்களை சங்கப் பார்வையில் சொல்கிறது.

கற்றரிந்த ஒரு சான்றோர் கூட்டம் அவ்வழி சொல்கிறது, அவர்களிடம் தன் ஓடிப்போன மகளைப் பற்றி கேட்கிறார் அந்த தாய். அதற்கு அவர்கள் கூறும் பதிலுரை மிகவும் யதார்த்தமாக, உண்மையை நச்சென்று உரைப்பதாகவும் - அந்தகாலத்தில் காதலுக்கு இருந்த மரியாதையை குறித்தும் நமக்கு உண்ர்த்துகிறது. காதலர்கள் மட்டுமே காதலை காக்காமல், ஒட்டுமொத்த சமுதாயமுமே காதலெனும் கொடியை உயர்த்தி பிடிக்கிறது. அச்சான்றோர் பெரும்பாலும் சமண முனிகளாக இருக்கலாம்.

இனி பாடலை கவனிப்போம்.

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'

'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;

பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

தாய்: அந்தணர்களே, என் மகள் இன்னெரு ஆண் மகனோடு அவ்வழி சென்றதைப் பார்த்தீர்களா? (இங்கு தாய் அந்தணர்களை புகழ்வது, அவர்கள் பொய்யுரைக்க இயலாதவாறு ஒரு சூழலில் அவர்களை கட்டும் நோக்கம் என்றே தோன்றுகிறது - ஐஸ் வைக்கிறது)

அந்தணர்: பார்த்தோம், வேலி (அ) காட்டுப்பக்கம். கவலைப்படாமல் நீங்கள் செல்லுங்கள்.

மலையில் பிறந்தாலும் சந்தனம் மலைக்கு சொந்தமல்ல, கடலில் விளைந்தாலும் முத்து கடலுக்கு சொந்தமல்ல, யாழில் பிறந்தாலும், இசையால் யாழுக்கு ஏதும் பயனில்லை, கேட்பவர்க்கே பயன்.

அதுபோல, உங்கள் மகளும் உங்களுக்கு சொந்தமல்ல. சிறந்தவன் ஒருவனை வழித்தொடர்ந்து சென்றிருக்கிறாள். அதில் தவறொன்றும் இல்லை மற்றும் அதுவே அறமும் ஆகும் என நினைத்து கவலையை விடுங்கள்.

இறந்த கற்பினாட்கு- என்பது மிகுந்த கற்பினள் என்பது பொருள் அல்லது நிறைந்த கற்பினள்

ஓடிப்போவது அப்போதிருந்தே நிகழ்வது. மனதில் வரித்துக்கொண்டவனை விட்டு வேறொருவனுடன் வாழ்வது கற்பாகாது என பெண்கள், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவது தமிழர் நியதி..

சென்றவளுக்காக வருந்தவேண்டாம் என அந்தணர்கள் –அறிஞர்கள் அந்த அன்னைக்கு அறிவுரை கூறுகின்றனர். இன்றைக்கும் இந்த பாடல் காட்சிகளை நான் அன்றாடம் காண்கிறேம்-(நன்றி தினத்தந்தி -தினமலர், தமிழ்சினிமா).

செய்திக்கும் –செய்யுளுக்கும் எத்துணை வேறுபாடு கூர்ந்து நோக்கின். அவ்வேறுபாடே நம் பண்பாட்டு வீழ்ச்சியை காட்டுகிறது. பழந்தமிழ் வாழ்கையின் எளிமையும், இனிமையும், பண்பும் ஒழிந்து இன்று சாதி, நிறம் என கூறுபட்டு கிடக்கிறது தமிழனின் வாழ்க்கை.