புதன், 28 ஏப்ரல், 2010

புறக்கணிப்பின் நெடுந்துயரம்

கடந்து கொண்டிருப்பதின்
நினைப்பற்று
கடந்து கொண்டே
காலம்
கால்மாற்றி கால்மாற்றி
பின்னும் வலைகளில்
இரையாகி விரிகிறது
நினைவுப்பெருவெளி

ஏதோ ஒரு இழையை
குருதி கொப்புளிக்க
அறுத்துச் சென்றது
கருவேலமுள்ளின்
கூர்நுனியொத்த
புறக்கணிப்பின்
நெடுந்துயரம்

இலக்கற்று வெறிக்கும்
தண்டவாளப் பார்வைகளில்
மரணித்த கனவுகளின்
இறுதிப்பயணம்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

மழையாய் மழைத்தல்

நேற்றிரவு
மழை
பெய்தது
முன்பும்
பலமுறை
நிற்காமல் பெய்த
நம்முதல் தீண்டல்
கறுத்த இரவைப்போல

மழை பெய்தபடியே
இங்கில்லாவிட்டால்
எங்காவது
வெயிலைப் போலவே
மழையும் அனுதினம்

மொழியின்
அடைமொழியில்
மூச்சுத்திணறாமல்
மழையாக மட்டுமே
பெய்தது அடைமழை

மழையாய் மழைத்தல்
மழையால் மட்டுமே
ஆகக்கூடியது

புரியத்தருகிறாய்

புரிந்துகொள்ளும் படியான
வார்த்தைகளில் நிகழ்வதில்லை
இயல்பான தருணங்கள்

புரிந்துகொள்ளும் வார்த்தைகளில்
விவரிக்கும் பொருட்டே நிகழ்கிறது
வீசியெறியப்படும் அனைத்து
கவிதைகளின் முதல்வரியும்

புரிந்துகொண்டதை
புரிந்துகொண்டதாகவே
புரிந்துகொள்ளும் என்புரிதல்களில்
புரியாத ஒருதருணமாகவே
புரியத்தருகிறாய் நீ.


புதன், 21 ஏப்ரல், 2010

இசையாய் புணர்ந்தவெளி

இளையராஜாவின் பாடல்களில்
மட்டுமே காதல் இன்னமும்
வாழ்வதாக நாம் கொண்டிருந்த
நம்பிக்கை இன்றளவும்
தன்னை புதுப்பித்து
வழிகிறது ஏமாற்றம்
புனைந்த விழியோரம்


நினைவுகளின் அடுக்கில்
நுழைந்து நம்மை குதறும்
சூழலின் வண்ணம்
வெறுமை நிறைந்த
இருளின் நிறமாகவே
இருப்பது தற்செயல்
ஒற்றுமையல்ல
தீண்டல் விளையாட்டின்
வெறித்த விட்டங்கள்
பிரிவின் வலிஅறிந்தவை
வண்ணங்கள் அற்றவை

கால்கள் புணரும்
பலகையின் ஓலம்
அறையை நிறைக்கும்
சீரற்ற நகர்வில்
தொக்கிநிற்கும் வெறுப்பின்
வலியுணர்ந்து தரையலறும்
இருளை குடிக்கும்
ஒலியின் ராகம்
ஒப்பாரி என்பது
உன்னைப்போலவே
எங்கோ வெறிக்கும்
இருள்மூலைகள் மட்டுமே
அறிந்த ரகசியம்

வெளியில் மிதக்கும்
இசையின் துண்டொன்று
எந்நொடியிலும் துளைக்குமென்ற
எதிர்பார்ப்புடனே அனுதின
புணர்வின் களம்
வறண்ட கண்ணீரை
மொழிபெயர்த்தறியும் குழலின்
துளைகளில் நிகழும்
வன்புணர்வில் குறிகளின்
குறிப்புகள் அல்லது
இசையாய்ப் புணர்ந்தவெளி

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நீநானிருளொளி

பின்னோக்கிச் சென்று
உன்னில் இருத்தல்
என்றாகிவிட்ட வாழ்வில்
நாம் மழைக்கு
ஒதுங்கிய மரங்களை
கண்டடைவது சிரமமாக
இருக்கவில்லை
எப்பொழுதும் நிற்கும்
அதே மரங்களின் மீது
பெய்த மழையை
எதிர்கொள்கிறேன்
எதிர்பாரா அவசர
நாட்களில் முன்போல
புதிராய் தெரிவதில்லை
என்றாவது கலையும்
முன்முடி கோதும்
விரல்களை எனதாக
நினைக்க மறுத்து
தீண்டல் கனவுகளில்
அலைபாய்கிறது
என் பதின்மத்தின்
சொச்சங்கள்
கலைத்த காற்றை
கண்டடைவதும்
எதிர்பாராமல் நடந்து
தொலைக்கிறது
அவ்வப்போது சிலமுறை

முன்பனி காலத்து
பின்மாலைப்பொழுதில்
நாசிநுனியில் பூசிய
குளிரை வெடுக்கென்று
பறித்த இளஞ்சூட்டின்
ஆதியும் அந்தமும்
அறியும் நிமித்தம்
இருளின் மென்மை
எழுதிய வரிகளில்
இடறியமேடுகள்
சமைத்த காலத்தின்
எல்லை எக்காலமும்
நான் கடந்திடமுடியா
பின்முன்மேல்கீழ்
நீநானிருளொளி
கரையும்சுகம்
கலையும்சுயம்
மயிர்கால்கள்
உயிர்பெற்று
வழியும்லயம்

திங்கள், 19 ஏப்ரல், 2010

நமக்கான ஒருமழை

என்னைப் போலவே நீயும்
உன்னைப் போலவே நானும்
முடிவில்லா கேள்விக்கு
முட்டாள்தனமான
விடைகளில்
பெருமூச்செரித்தெரிய
உன் கோவத்தில் என் காதலும்
என் கோவத்தில் உன் காதலும்
அலைகழிகிறது மாலைக்காற்றில்
இலவுவெடித்த வெற்றுப்பஞ்சு

காதலை சுமந்து திரிந்த
பருவ நத்தைகள் நாம்
உன் உலகம் உனக்கானது
என் உலகம் எனக்கானது


கருமழை முன்னிரவில்
நாம் ஒடுங்கிய குடை
அறிந்திருந்தது
நமக்குள் வறண்டிருந்த
பொட்டல்வெளியை

சவரம்செய்து
கட்டிப்பிரிந்து
நாள்முழுதும்
திரைவெறித்து
பிணமாய் நகரும்
வாழ்க்கை உனக்கும்
வாய்த்திருக்கும்

ஊடாடும் கனவுகளில்
உச்சமடையும் உன்
இயலாமை என்னையும்
பிய்த்தெறிந்து
ஓலமிடாது அனுதின
இரவுகளில்
குடைதுறந்து
நமக்கான ஒருமழையை
நீ பெய்வித்திருந்தால்

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வானவில் தீண்டல்

உன்னை பார்த்து ஒருநிமிடம்
தான் ஆயிற்று அதற்குள்
கணிணித் திரையில்
கவிதை வரிகள்

இதயம் இருப்பதை
நிறுத்தி நிறுத்தி
உணர்த்துபவள் நீ
கண்கள் இருப்பதை
வெறித்து வெறித்து
ரசிப்பவன் நான்

இதுவரை எழுதிய
கவிதைகளில் உனக்கான
ஒன்றை தேடிவைத்தேன்
உன்பெயரை கண்டநொடியில்
கூட்டுத்தற்கொலை
குறிப்பெழுதிவைத்தது
கவிதைகள்

நீ ஒரு sweet romance
Post Modernism புக மறுக்கிறது
வரிகள்

அருவித்துரும்பு நான்
வீழ்ச்சியின் ஈரத்தில்
உன் வானவில்
தீண்டல்

வியாழன், 15 ஏப்ரல், 2010

முயத்தலின் மழைக்காடு

பேனா முனையில் துயிலும்
கவிதையென சிறகுகளின்
மென்நுனியில் கண்விழித்தது
இன்றைக்கான பறத்தல் தூரம்

தொலைவின் அளவை
வேர்நுனி அளக்குமா
இலைதழுவும் காற்று
அளக்குமா பயணத்தின்
கனவுகளில் வானம் மட்டுமே
தொடக்கிடைக்கும் தூரத்தில்

உன்முத்தத்திற்கு பின்பும்
பெய்துகொண்டிருந்தது மழை
நீதான் முத்தமழையா
நீ அணைப்பதற்கு முன்பே
எரிந்துகொண்டிருந்தது
மயிர்க்கால்களின் வழியே
தொன்மத்தின் முயத்தல்
கங்குகள்

முயத்தல் மழை இன்னமும்
சொட்டிக்கொண்டிருக்கும்
இலைநுனி கலைக்கும்
நினைவின் அடுக்குகளில்
வெளிறிய அல்குலின்
மெல்லிய துடிப்புகள்

இடைவெளி தொலைந்த
இடைகளின் வெளியில்
உயிர்பெற்று விரிந்தது
ஒளியும் நுழைந்தறியா
மழைக்காடு