வியாழன், 17 டிசம்பர், 2009

Cubicle Chaos

Secret Santa விளையாடி முடித்தோம் போன வெள்ளி. இதில் Santa-Angel என் இரண்டு பகுப்பு. நாம் ஒருவருக்கு Santa எனில் அவர் நமக்கு Angel. நமக்கும் ஒருவர் Santaவாக இருப்பார், அவருக்கு நாம் Angel. இது அனைத்தும் ரகசியமாக நடக்கும். திடீரென நமது Cubicleல் ஒரு பரிசு உட்கார்ந்திருக்கும்.

என்னுடைய Santa யாரென தெரியவில்லை.. அந்த கஞ்சூஸ் ஒரு பரிசும் தரவும் இல்லை. அடிக்கடி நான் அவனை/அவளை திட்டிக்கொண்டே இருந்தேன். வெள்ளியன்று அதுவெளியாகிவிட்டது, எனது பக்கத்து Cubicle பையன் தான் அது. நான் அவ்வளவு திட்டியும் மனுசன் ஒரே Chocolate கதையை முடித்துவிட்டான். :(
____

ஆண்டு கடைசி என்பதால் அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம், ஊழியர்களின் மனநிலையும் அங்கனமே. எனவே பெரிதாக தொழில் வாய்ப்புகள் இல்லை எனினுன் என் துறைசார்ந்து ஒரு deal, win ஆகக்கூடிய தறுவாயில் இருக்கிறது. வென்றால் பணம். :), Sales Commission என ஒரு பங்கு நமது வங்கிகணக்கில் வந்து சேர்ந்துவிடும். Show me the money, honey! ம்ம்ம் இப்ப தான் நினைவுக்கு வருது, ஒரு பையனை refer செய்த பணமும் வர வேண்டும், Show me some more money, honey!

இந்த வாரம் முதல்நாளே Floor'ல் பயங்கர சண்டை. அந்த Team Lead தளத்தில் இல்லை, நம்ம ஊர் பையன் தான். சண்டை பார்ட்டிகளில் ஒன்று மகாராஷ்ட்டிரா மற்றொன்று பிகார். பீகார் பொண்ணு/ஆண்டி: எங்க அப்பா இங்க வந்தா உன் கால வெட்டி காக்காவுக்கு போட்டுருவாரு.. (நல்ல வேள.. காலோட நிறுத்துனா.. பாவம் அந்த மபி பையன், அவனை அடிக்க ஓடி இருக்கு இந்த பெண் (??). பீகாரி என்று எதற்கு அடைமொழி தந்து அடித்து துரத்துகிறார்கள் என Floor ஒரு நிமிடம் மகாராஷ்டிரா, பாம்பே, சிவசேனா என பிளாஷ்பேக்கி, அந்த பையனை பாவமாக பார்த்தது. People never grow up, especially North Indians.
------------------
ஒரு மாதத்திற்கு முன்பு, எங்க டையரடக்கர் (Director), USல் இருந்து வந்திருந்தார். வழக்கம் போல இல்லாம, அவரையும் ஓட்டிட்டு ஒரு resortக்கு Team Buildingக்கு போனோம். அந்த Building'ல தண்ணிவருமான்னல்லாம் கேக்கப்படாது. :). அந்த பில்டிங்குல Foose Ball அப்படின்னு ஒரு விளையாட்டு. நின்ன இடத்த விட்டு நகராம Foot Ball ஆடனும். நம்ம டயரடக்கர் அமெரிக்கன்னு மறத்து போச்சு மக்களுக்கு... அவருக்கு எதிரா ஆடுன டீம் எல்லாம் Goalஆ போட்டு தள்ளுரான்! நம்ம Director தான் Goal Keeper. haha. Americans suck if its a Soccer game!

Very admirable thing is, கடுப்புல ஒருத்தன் fuck u wallace'ன்னு கத்திட்டான். அந்த பையன் UK'ல படிச்சவன், so Soccer is bread and butter. மொத்த ground'ம் froze!! But Wallace took it very sportive! My gosh, can you think about a fortune 10 company Director playing with you foose ball and you're calling him names and f*** words? ! இதையெல்லாம் பார்க்கும்போது, நம்ம ஊர் டேமேஜர்களையெல்லாம் பார்த்தா.. நீ இன்னும் வளரணும் தம்பி! :)

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஆரஞ்சுநிறப்பரிதி

இக்கவிதைக்கான படிமக்குறியீடு
நீங்களாகவும் இருக்கலாம், அனுமதி
கேட்டு பழக்கமில்லை எனக்கு.

இக்கவிதையின் வரிகள்
உங்களுடையதாக இருக்காலாம், சரிபார்க்கும்
பழக்கமில்லை எனக்கு

இக்கவிதையில் விரியும் இரவுகளின்
வெறுமையில் தொலைந்தது உங்கள்
தூக்கமானாலும், வலிகொண்டு அலறுவது
என் கனவுகளே.

இக்கவிதையின் புறக்கணிப்பில் உடைபடுவது
உங்கள் சுயமென்றாலும், அதீதவிருப்பின்
சுயப்புணர்வு வெளித்தள்ளும் வெண்ணிற
இரவுகளில் முளைத்தெழுவது வான்காவின்
ஆரஞ்சுநிறப்பரிதி.

புதன், 2 டிசம்பர், 2009

தேவநாதனின் பிந கட்டுடைத்தல் அல்லது அம்பி தேவநாதான் வாழ்க!

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்! பொந்து மதம் முழுக்க சாமிகளும், கோயில்களும் கூத்தாடி மடங்களென செயல்பட்டு, கல்லுக்கு தாலி கட்டி, அதற்கு கல்யாணம் செய்து வைத்து, பிள்ளைகளும் பெற வைத்து அதற்கும் 2 பொண்டாட்டி, ஊரெல்லாம் வைப்பாட்டி என கதைகள் சொல்லி... உடலெல்லாம் பெண்குறி முதல், அடுத்தவன் பொண்டாட்டியை ஏமாற்றி கெடுப்பது வரை.. பொந்து மதம் நிஜமாகவே பொந்து மதம் தான். எந்த பொந்து என்ற அதிபுத்திசாலித்தன கேள்வியெல்லாம் கேட்டால் நான் தேவநாதனிடம் refer செய்யவேண்டி இருக்கும். :) :)


ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாய் தேவநாதன் மாமிகளை கரெக்ட் செய்ய, சங்கராச்சாரியாரெல்லாம் இளமை புதுமை பிகர்களையே மடக்கி போட்டவர். பின்நவீனத்துவ கட்டுடைத்தலின் முழு பிம்பமாய் திகழும் தேவநாதன் முதலானவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கடவுள் என்பதெல்லாம் கல், மற்றும் கல்லா கட்டுதல் என்பதை முற்றும் முடிவாக உணர்ந்தவர். From Sex to Super consciousness என கதை விட்ட ஓஷோவையெல்லாம் ஓரங்கட்டிய அரைக்குடுமி. :)

பொட்டு கட்டி தேவதாசிகளுடன் கருவறை கல்யாணமண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என ஓடிப்பிடித்து விளையாடிய ஆரோக்கியமான சமூக பிண்ணனியில் இருந்து வரும் தேவநாதனின் சிந்தையில் இழந்த பெருமைகளை மீட்கும் வரலாற்று கடமை மலையென முன்நின்றிருக்கிறது. கல்யாணம் ஆகி மனிவியும் பிள்ளையுமாய் இருக்கும் கடவுள்கள் இரவில் என்ன செய்வார்கள்?! என்ற மில்லியன் டாலர் கேள்வியும் தேவநாதனுக்கு எழுந்திருக்கலாம். :)

ரமேஷ்:பிரேமின் மொழிவிளையாட்டில் சொல்வெதென்றால்... அதீத இருட்டில் அடைபட்டிருக்கும் தெய்வபிம்பங்கள் ஆடையினை தொலைத்து சூழலை ஓளிபெறச்செய்தது. கற்கள் மோதிக்கொள்ளும் ஒலி இருட்டை கிழித்து அண்டவெளியின் ஆத்ம தாகத்தை தணித்தது. :)

கோயில் என்றால் வழிபாடு என்ற இடைச்செருகலை கட்டுடைத்து, கருவறை, பள்ளிஅறை என்பதன் அடிநாதமான விளக்கத்தை மக்களுக்கு “படம்” பிடித்து காட்டிய புரட்சியாளர் தேவநாதன் போன்ற சமுதாய முன்னேடிகளே பெரியருக்கு பின்பான சுயமரியாதை தமிழகத்தின் தேவை. :) பெரியாரும் செய்திருக்க முடியா புரட்சி இது, ஆனால் வரலாற்றின் பக்கங்களில் மிக கேவலமாக பதிய வேண்டி இருப்பது, தேவநாதன் போன்றோர் முன்னெடுக்கும் புரட்சியினை அழிக்க நினைக்கும் ஆத்திக அறைகுறைகளின் திட்டமிட்ட சதி என்றே நினைக்கிறேன். :)

திரட்டப்பட்ட கூலிப்படை துடைப்பம், முறம் மற்றும் முட்டை எறிகையில் மனதிற்குள் வடை போச்சே என்ற Nancy Friday Women on Top Fantazy கனவுகள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறாதா இல்லையா என்பதை பிராய்டின் தீவிர மாணவர்கள் யாராகிலும் இருந்தால், அவர்களுக்கென விட்டு வைக்கிறேன். காதல் புனிதமானது, காமம் புனிதமானது, புதிரா/புனிதமா, கணவன் தேவன் மனைவி தேவி.. என்பதெல்லாம் மிகச்சரியான நடைமுறைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுகையில், அதற்கான களம் “புனிதம்” என கட்டமைக்கப்பட்ட கோயில் தான் சரியான இடம் எனபதை உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்தரதவரா தேவநாதன்?? :)

கட்டுடைத்தலுக்கு ஆள் சேர்க்கும் பிநா சங்கம் ஏற்கனவே தேவநாதனை அதன் தலைவராக ஏற்றுக்கொண்டதான நிலாமுற்ற கூட்டமொன்றில் குஜிலி, குஜாலிகளுக்கு மத்தியில் அறிவித்தாகிவிட்டது. அடுத்த திட்டமாக, மேலும் பல தேவநாதன்களை உருவாக்கும் ...த்துபட்டறை ஒன்றையும் உருவாக்குமாறு பீடங்கள், மடங்கள், முடங்கள், குடங்கள் அனைத்திற்கும் அவர்கள் ஏற்கனவே விரிவான குறிப்பு ஒன்றை பௌர்ணமி மேகங்களுக்குள் தொலையும் இரவொன்றில் அனுப்பிவைத்தற்கான பிரதியை தேவநாதனின் சிறைச்சாலை சுவர்களின் செங்கற்களில் படிமச்செய்தியாய் அனுப்பிவைத்திருக்கின்றனர்.

கடைசியாக எதிர்கட்சியினருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்... முடிந்தால் இந்த தேர்தலில் தேவநாதனை தோற்கடித்து பாருங்கள்... அவரின் குடுமியை அசைக்கமுடியாது என்பதை அவருடன் கருவறையை பகிர்ந்துகொண்ட 15பெண்களின் மீது சத்தியமாக சொல்க்கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

அம்பி தேவநாதன்.... வாழ்க உங்கள் ஓட்டு தேவநாதனுக்கே... அம்பி தேவநாதன் வாள்ள்ள்ள்ள்க...





செவ்வாய், 10 நவம்பர், 2009

தொடர் விளையாட்டு

கடந்த 5 வருடங்களாக தமிழகத்திற்கு வெளியே வசிப்பதால், அன்றாட கவனிப்புகளின் பாதிப்புகள் மிகவும் குறைவு. தமிழைத்தவிர மனிதர்களும், படிமங்களும் மறந்து போன ஒரு தருணத்தில் இந்த பட்டியலை எழுதுவது சற்று சிரமமான காரியமே.

ஏனெனில், வீடெடுக்கும்போதே தமிழர்கள் இருக்கும் ஏரியா என்றால் சற்று யோசிப்பவன் நான். இதுபோன்ற ஒரு சுரணையற்ற, இன-மொழி-வரலாற்று அறிவற்ற, சுயலநல- சுரனையற்ற கூட்டத்தை நீங்கள் நிலா-மார்ஸ் ஏன் ஆன்ரோமீடியாவில் தேடினாலும் கிடைக்காது. அதில் பிடித்த-பிடிக்காத கூட்டத்தை எப்படி இனங்காணுவது??


நட்பின் வேண்டுகோளுக்கிணங்க....

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : தொலைநோக்கோ, இனப்பற்றோ, தெளிவோ, உறுதியோ யாரிடமும் இல்லை. வரும் நாட்களில் திருமா கவனிக்கப்படலாம்.

பிடிக்காதவர்: ஜெ, வைகோ


2.எழுத்தாளர்

பிடித்தவர் : அவ்வளவாக படிப்பதில்லை, சமீபத்தில் வியந்த படைப்பாளி என்றால் தோப்பில் முகமது மீரான்இவரைத்தெரியவில்லை என்றால் நீங்கள், ஜெமோ, சுரா, எஸ்ரா, மபு வகையாரா என நினைக்கிறேன்). ஜே.பி சாணக்யா, கி ராஜநாராயணன் விருப்பம். என்றென்றும் கலைஞர். ரமேஷ்:பிரேம். ஒரு புளியமரத்தின் கதைக்காக : சுரா

பிடிக்காதவர் : எல்லோருமே பிடிக்காதவர்கள் தான். எனினும் எழுதும் மன உறுதிக்காக யாரையும் குறிப்பாக சொல்ல விருப்பமில்லை. வேர்களைத் தேடி பதிய முயலுங்கள், அதுமட்டுமே என் வேண்டுகோள்.

3.கவிஞர்

பிடித்தவர் : கல்யாண்ஜி, ரமேஷ்:பிரேம், விக்கிரமாதித்தியன், கலைஞர்.. புதிதாய் எழுதும் எவரும் பரிச்சயமில்லை.

பிடிக்காதவர் : எல்லோருமே பிடிக்காதவர்கள் தான். எனினும் எழுதும் மன உறுதிக்காக யாரையும் குறிப்பாக சொல்ல விருப்பமில்லை. வேர்களைத் தேடி பதிய முயலுங்கள், அதுமட்டுமே என் வேண்டுகோள். :)

4.இயக்குனர்

பிடித்தவர்: பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா, சேரன், செல்வராகவன்

பிடிக்காதவர் : பெரும்பாலான இயக்குனர்கள்.


5.நடிகர்

பிடித்தவர் : கமல், விஜய், ரஜினி, பிரகாஷ்ராஜ் (தமிழை அழகாக பேசுவதற்காகவே இவர் மீது பெருமதிப்புண்டு), ரகுவரன், கவுண்டர், வடிவேலு, ராமராஜன் (தெளிவான, நேர்மையான பாத்திரங்களுக்காக-எம்ஜிஆருக்கு அடுத்தது அப்படி முயன்ற ஒரே நடிகர் எனலாம்)

பிடிக்காதவர் : பெரும்பாலான நடிகர்கள்


6.நடிகை

பிடித்தவர் : மாதவி, பானுப்பிரியா, ரேவதி, அர்ச்சனா, கோவை சரளா, ராதா, அம்பிகா

பிடிக்காதவர் : நடிகைகளுக்காக படம் பார்த்ததில்லை. எனவே பிடிக்காதவர் என்று குறிப்பிட்டுச் சொல்ல யாரும் இல்லை


7.இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர்: யாரையும் தேடிச்சென்று கேட்பதில்லை.


8. பாடகி & பாடகர்

பிடித்தவர் : டிஎம் எஸ், பிபிஎஸ், இளையராஜா, ஏசுதாஸ், சுசீலா, சித்ரா, ஜானகி, ஸ்ரேயா கோஷல்,

பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை. தமிழை கொல்லும் இந்தி பாடகர்களை அழைத்து வருவரும் இசை அமைப்பாளர்கள்.


9. தொலைகாட்சி நிகழ்ச்சி

பிடித்தது : ஜெயா மேக்ஸ் பாடல்கள்
பிடிக்காதது : மற்ற அனைத்தும்


10. சமீபத்தில் ரசித்த திரைப்படம்

பிடித்தது : சுப்பிரமணியபுரம், பசங்க
பிடிக்காத
து: சொல்ல நினைப்பது : (நீங்க இன்னும் வளரணும் தம்பி)

யாரை அழைப்பது எனத்தெரியவில்லை: தொடருக்கான இருவரை அழைக்கும் சுமையை மீண்டும் ராஜசேகரிடமே விடுகின்றேன். ராஜ் மன்னிக்கவும்.


வெள்ளி, 30 அக்டோபர், 2009

நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல்!

No Comments.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

Its time to kill the PARENTS!

காதலெனும் வார்த்தையின் புரிதல் சமூகம், தனிமனிதன் என்ற அடையாளங்களுக்கேற்ப மாறுகிறது. அதற்கென ஆதிமுதல் சேர்க்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட காரணிகள் அதன் வேலையை செவ்வனெ செய்கிறது. அலர் தூற்றல் சங்கம் முதல் சமூக கடமையென தொடரும் வன்முறை. வீட்டில் நிகழும் வன்முறைகள், சமூக எதிர்பார்ப்பிற்கேற்ப, சமூக பின்விளைவுகளை மனதிற் கொண்டு கூடவோ, குறையவோ செய்கிறது.

சமூகத்தின் போலி எதிர்பார்ப்புகளில் இருந்து தன் அன்பின் எச்சங்களை, வாழ்வின் அர்த்தங்களை காத்திட வேண்டிய பெற்றோர்கள், மூர்க்கத்தனமாக அன்புகொண்ட நெஞ்சங்களின் தேடல்களை கருக்கி, ஒழுக்க விதிகளின் ஒட்டுமொத்த உருவம் என் பிள்ளை என பெருமைப்படும் காகித மனிதர்கள்.

காலம் காலமாக காதல் கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்மைதான். விவரிக்கவியலா எண்ண ஓட்டங்களும், உணர்ச்சி வசப்பட்ட எதிர்பார்ப்புகளும் கொண்ட பெண்மை, தொடர்ச்சியாக தன் எதிர்பார்ப்புகளை கருக்கிக்கொண்டு, தன் மனதைக் கொன்று, பொற்றோர் இட்டது சட்டமென தன் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கிறது.

இதில் பெருங்கொடுமை Honour Killings எனப்படும் சைக்கோ கொலைகள். ஆயிரமாயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கனவுகளோடு சேர்த்து தங்களையும் இழந்து கரந்து போகின்றனர். இது எத்துனை நாட்கள் இப்படியே நகரும்? பெண்மை பெரும் அழிவுசக்தியாக கட்டமைக்கப்பட்ட இந்த சமுதாய, மத, இலக்கிய கற்பனைகள் வெறும் கனவா??

இல்லை அது தன் இயல்பை மீட்டெடுக்கும் நாட்கள் அரங்கேறுகின்றன, அதற்கு அச்சாரமாய் ஹரியான மாநில, கபூல்புர் கிராமத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கிளம்பியுள்ளார்.

ஒரே கோத்திரம், மூத்திரம் என உதவாத சாத்திர கதைகளை சொல்லி தன் காதலைபிரிக்க நினைத்த தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்று தன் வெறியாட்டை நிகழ்த்தியிறுக்கிறார். இனி இது தொடர் கதையாய் நிகழ வாய்ப்பிருக்கிறது.
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

தன் காதலின் வலி தெரியாமல் தூங்கும் ஊரை ஒரு வழி செய்திவிடுவதாக பெண்புலியென உறுமும் அவ்வையார்களை நாம் வைதீக மூட்டைகளின் கட்டுப்பாட்டில் எங்கோ தொலைத்துவிட்டோம். What goes around, comes around!

எத்தனை காலம் தான் பெண்கள் அடங்கி அடிமையாய் வாழ்க்கையை தொலைத்து நடைபிணங்களாய் மடிவார்கள்? இது நாள் வரை சமூகமும், குடும்பமும் காதலர்களை கொன்று குவித்த காலித்தனத்திற்கொல்லாம் பதிலிறுக்க புறப்பட்ட சோனத்திற்கு என் வந்னங்கள்.

உதவாத காரணங்களுக்கெல்லாம் கொலைகள் நிகழ்தப்படும் இந்த காலத்தில், lets kill some parents for the sake of love. கொலை தீர்வாகிவிடுமா என ethical questioning எழுப்பும் மி.கி.மா’களுக்கு... மவனே அடுத்த டார்கொட் நீதான்... உஷாரா இருந்துக்கோ.

சனி, 1 ஆகஸ்ட், 2009

கலித்தொகை - ஓடிப்போன மகள் - தேடும் தாய்

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று, சங்க இலக்கியம். சீரற்ற அடிகளில் சற்றே பெரிய பாடல்களாய் 150 காதல் பாடல்கள். திணைக்கு முப்பது பாடல்களாய், ஐந்து திணைக்கு 150 பாடல்கள். அனைத்துமே காதலின் பல்வேறு பரிமாணங்களை சங்கப் பார்வையில் சொல்கிறது.

கற்றரிந்த ஒரு சான்றோர் கூட்டம் அவ்வழி சொல்கிறது, அவர்களிடம் தன் ஓடிப்போன மகளைப் பற்றி கேட்கிறார் அந்த தாய். அதற்கு அவர்கள் கூறும் பதிலுரை மிகவும் யதார்த்தமாக, உண்மையை நச்சென்று உரைப்பதாகவும் - அந்தகாலத்தில் காதலுக்கு இருந்த மரியாதையை குறித்தும் நமக்கு உண்ர்த்துகிறது. காதலர்கள் மட்டுமே காதலை காக்காமல், ஒட்டுமொத்த சமுதாயமுமே காதலெனும் கொடியை உயர்த்தி பிடிக்கிறது. அச்சான்றோர் பெரும்பாலும் சமண முனிகளாக இருக்கலாம்.

இனி பாடலை கவனிப்போம்.

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'

'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;

பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

தாய்: அந்தணர்களே, என் மகள் இன்னெரு ஆண் மகனோடு அவ்வழி சென்றதைப் பார்த்தீர்களா? (இங்கு தாய் அந்தணர்களை புகழ்வது, அவர்கள் பொய்யுரைக்க இயலாதவாறு ஒரு சூழலில் அவர்களை கட்டும் நோக்கம் என்றே தோன்றுகிறது - ஐஸ் வைக்கிறது)

அந்தணர்: பார்த்தோம், வேலி (அ) காட்டுப்பக்கம். கவலைப்படாமல் நீங்கள் செல்லுங்கள்.

மலையில் பிறந்தாலும் சந்தனம் மலைக்கு சொந்தமல்ல, கடலில் விளைந்தாலும் முத்து கடலுக்கு சொந்தமல்ல, யாழில் பிறந்தாலும், இசையால் யாழுக்கு ஏதும் பயனில்லை, கேட்பவர்க்கே பயன்.

அதுபோல, உங்கள் மகளும் உங்களுக்கு சொந்தமல்ல. சிறந்தவன் ஒருவனை வழித்தொடர்ந்து சென்றிருக்கிறாள். அதில் தவறொன்றும் இல்லை மற்றும் அதுவே அறமும் ஆகும் என நினைத்து கவலையை விடுங்கள்.

இறந்த கற்பினாட்கு- என்பது மிகுந்த கற்பினள் என்பது பொருள் அல்லது நிறைந்த கற்பினள்

ஓடிப்போவது அப்போதிருந்தே நிகழ்வது. மனதில் வரித்துக்கொண்டவனை விட்டு வேறொருவனுடன் வாழ்வது கற்பாகாது என பெண்கள், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவது தமிழர் நியதி..

சென்றவளுக்காக வருந்தவேண்டாம் என அந்தணர்கள் –அறிஞர்கள் அந்த அன்னைக்கு அறிவுரை கூறுகின்றனர். இன்றைக்கும் இந்த பாடல் காட்சிகளை நான் அன்றாடம் காண்கிறேம்-(நன்றி தினத்தந்தி -தினமலர், தமிழ்சினிமா).

செய்திக்கும் –செய்யுளுக்கும் எத்துணை வேறுபாடு கூர்ந்து நோக்கின். அவ்வேறுபாடே நம் பண்பாட்டு வீழ்ச்சியை காட்டுகிறது. பழந்தமிழ் வாழ்கையின் எளிமையும், இனிமையும், பண்பும் ஒழிந்து இன்று சாதி, நிறம் என கூறுபட்டு கிடக்கிறது தமிழனின் வாழ்க்கை.

வியாழன், 30 ஜூலை, 2009

கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை

கங்கைகொண்ட சோழபுரம் - தமிழகத்தின் நிகரில் சோழவேந்தனான ராசேந்திர சோழனின் கையெழுத்துப் படைப்பு - (Signature Masterpiece). ராசேந்திரரும் தஞ்சையிலே ஆட்சியை தொடர்ந்திருந்தால் நமக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்ற கலைக்களஞ்சியம் கிடைக்காமலே போயிருக்கும். எதையும் துணிவுடன், தனித்து செய்யும் ராசேந்திரரின் கலைப்பார்வையின் அழகுயல் வெளிப்பாடே. தஞ்சையும் - ககொசோழபுரமும் பலவகையில் ஒருங்கமைவு கொண்டவை. அதில் மிக இன்றீயமையாதது - கடவுளர் சிலைகள் தவிர மற்ற சிலைகளை கருவறையிலோ அல்லது அதன் பிரகார சுவற்றிலோ காணமுடியாது.

கடவுளர்-சிவகணங்கள்-நாயன்மார் அல்லது புராண மாந்தர்கள். ராசராசரோ - ராசேந்திரரோ அல்லது எந்த சோழமன்னர்களோ கோவில் பிரகாரங்களில் செதுக்கப்படவில்லை. அத்துணை விதமான சிவனை ரசிக்கலாம் தஞ்சையில். அழகியலும் கம்பீரமும் ததும்பும் அச்சிலைகள் நம் முன்னோர்களின் நிகரில் திறன். நிகரில் சோழமண்டலம் என்பது காரணப்பெயர் தான் போலும். ககொசோழபுரத்தில் சில சிற்பங்கள் உயிர்பெற்று நம்முன் நிற்பது போலவே தோன்றும். சந்திரசூடேச்வரர்-சிவன் பார்வதி சிலைபோன்ற அழகிய வடிவை நான் வேறெங்கும் கண்டதில்லை.
கல்லென்றால் கல் - கடவுள் என்றால் கடவுள் என குழப்பிய கண்ணதாசன் - கலை என்றால் கலை, நிலை (நிலையானது) என சொல்லிச் செல்லாமல் விட்டார். கடவுள் கால் கிலோ என கேட்கும் நமக்கே அந்த சிலைகளின் மீது காதல் வருமளவிற்கு தன் தறனை அந்தச் சிலையில் விட்டுசென்றிருக்கும் அந்த சிற்பியின் பாதங்கள் என் தலை மேல்!

நிற்க: ககொசோழபுரத்து அழகை மற்றொரு பதிவில் பார்க்கலாம். தலைப்பிற்கு வருவோம்.

கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை என்கவனத்தை ஈர்த்தது. அது ஒரு நாயக்கர் கால சிற்பம். எந்த நாயக்க மன்னன் எனத்தெரியவில்லை - புக்கராயன் அல்லது அவனுக்கு பிறகு வந்த எவராவது இருக்கலாம். கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம் - அவரே சராசரி உயமுள்ள அரசர் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன. இங்கு சிலையின் உயரமும் குறைவே.

அந்த புகைப்படத்தை பாருங்கள்.




From Gangaikonda Chozapuram


From Gangaikonda Chozapuram

பார்த்த உடன் சொல்லி விடலாம் இது ஒரு நாயக்கரின் சிலை. சிவனின் மண்டபம் இது. அவரைச்சுற்றி தேவகணங்கள் ஆடுகின்றன.

இனி ஆராய்ச்சி:

1. நாயக்கர் கால சிலை என்பதன் முதல் அடையாளம் கிரீடம். சோழர்களின் கிரீடத்திற்கு ஈடு இணையே இல்லை இவ்வுலகில். இதற்கு முந்தைய படத்தில் சிவனின் கிரீடத்தை பாருங்கள்!
2. சோழர்களின் ஒவ்வொரு சிலையும் ஒரு வித கலைநுணுக்கத்துடன் விளங்கும். கோயிலில் இருக்கும் ஒவ்வொரு சிலையின் அலங்காரமும் வேறுபட்டிருக்கும் ஆனால் சோழத்தின் அடையாளம் அதில் மிக ஆழமாய் இருக்கும்.
3. இந்த ‘படி’ (அளக்கும் படி போன்ற தலைக்கிரீடம் விஜயநகர மன்னர்களின் அடையாளம்), பல கோயில்களில் கிதேவராயர் அணிந்திருக்க நாம் காணலாம்.
4. சிலை இருக்கும் மண்டபம் சிதைக்கப்பட்டு, இந்த சிலை திணிக்கப்பட்டிருக்கிறது.
5. சிலை பூணூல் அணிந்திருக்கவில்லை.
6. சிலையை சுற்றி சிவகணங்கள் அமர்ந்திருக்கின்றன. அவை அவரை வணங்குகின்றன. (மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது, சிவன் மட்டுமே இறைவன்)
7. வேறெந்த பிரகார மண்டபமும் இப்படி உடைக்கப்பட்டு, சிலை திணிக்கப்பட்டிருக்கவில்லை - அவை முழு-ஆளுயர சிற்பங்கள் - ஒரே கல்லில்- பிரகாரத்தோடு இணைந்திருக்கும்.
8. சிலையின் பீடம் சுவற்றிற்கு வெளியே இருக்கிறது


சோழர்களுக்கு பின்வந்த விஜயநகர பேரரசு பல சோழக்கோயில்களில் தங்களின் வேலையைக் காட்டி இருக்கிறது. இதை நான் கோலார் (ராசேந்திர சோழர் எடுத்த கோலாரம்மா கோயில்), http://eyilnadu.blogspot.com/2009/07/blog-post.html பெங்களூர்(தொம்ளூர் -சொக்கநாத கோயில் - இதை பெருமாள் கோயிலாக மாற்றிவிட்டிருக்கிறார்கள்), தஞ்சை பெரியகோயில் மற்றும் பல கோயில்களில் கண்டிருக்கிறேன். பெரும்பாலான மொட்டை கோபுரங்களின் மேல் ராஜகோபுரம் கட்டியதும் இவர்களே.

இவர்கள் இந்து மன்னர்கள் என்பதால் இத்தோடு சென்றது - இல்லையெனில் கோயில் சூறையாடப்பட்டு சிலைகள் மூக்குடைபட்டிருக்கும்.

ராசேந்திரசோழன் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார் - உலகையே வெற்றிகொண்டு ஊர்திரும்பி தான் கட்டிய கோவிலில் ஒரு நாயக்க மன்னன் வந்து தன் சிலையை திணிப்பான் என்று! ராசேந்திரன் இதை முயன்றிருந்தால் - இலங்கை முதல் மலேசியா, கம்போடியா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் முதல் உள்ள கோயில்களிலெல்லாம் அவரின் சிலை தான் இருந்திருக்கும். நம்ம ஆளுங்க ரொம்ப நல்லவங்க..

இதைவிட பெரிய பயங்கரம் - யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கிறது. அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

புதன், 29 ஜூலை, 2009

மோடிக்லியானி - திரைப்படம் - ஓவியம்

Modigliani திரைப்படம் பார்ப்பதற்கு முன்பே அவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். பிக்காசோ’வின் சமகாலத்தவர் மற்றும் நண்பர். அதீத குடிப்பழக்கம் மற்றும் மோசமான உடல்நிலையால் இளவயதிலேயே மரணித்தவர்.

Andy Garcia நடித்த Modigliani என்ற திரைப்படம் அவரின் வாழ்க்கை வரலாறு. அருமையான திரைப்படம். ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு Modiglianiயை தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த திரைப்படத்தின் முடிவில், பிக்காசோவும், அவரும் மற்ற ஓவியர்களும் ஒரு ஓவியப்போட்டியில் பங்குபெறுவர். அதற்காக Modigliani வரையும் ஓவியம் உலகபுகழ்பெற்றது.

அதை உந்துதலாக கொண்டு நான் ஒரு படம் வரைந்தேன் சமீபத்தில். எண்னெய் வண்ணம். உங்களின் பார்வைக்கு.



zeestudioவில் அடிக்கடி Modigliani திரைப்படம் போடுவார்கள். அலுக்காத படம் - Art Film - Artist குறித்த படம். ஹஹ.


மேலதிக விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் இவரை பிடிக்கலாம். இந்த முகவெட்டிற்கு Andy Garcia பொருத்தமான தேர்வு. இவரின் காதல் மனைவி இவர் இறந்த இரண்டு நாளில் தற்கொலை செய்து கொண்டார் - காவிய - ஓவியக் காதல். மிகவும் அழகான காதல் கதை இவர்களுடையது. :(.


ஆயிரத்தில் ஒருவனின் வரலாற்றுப் பிழை - வைரமுத்து மற்றும் கர்நாடக சங்கீதம்




தமிழை புனரமைத்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. பல்லவ காலம் வரை பிராகிருதம், சமசுகிருதம் என அரசாங்க கல்வெட்டுகளில் இடம்பெற்ற நிலை மாறி, தமிழ் முழுமூச்சுடன் அரசாங்க மொழியாக நிலைபெற்றது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தான். ராஜராஜரின் காலம் முதல் தமிழ் கோயில் மொழியாகவும் நிலைபெற்றது.

ராசராசரின் காலம் 10ஆம் நூற்றாண்டு. அக்காலத்திய ராசராசேசுவர உடையார்(தஞ்சை பெரிய கோயில்) கோவிலின் கல்வெட்டுகள் மிகத்தெளிவாக திருப்பதிகம் கோவிலில் ஓதப்பட்டதாக சொல்கின்றன. திருமறை கண்ட சோழன் என ராசராசர் மிகவும் மதிப்புடன் வழங்கப்படுகிறார்.

பார்க்க: கல்வெட்டின் படி இணைப்பு.

சம்பந்தர், நாவுக்கரசர் மற்றும் நம்பியாண்டார் நம்பி பெயர்களில் தனித்தனி குழு அமைத்து 48 பேர் திருப்பதியம் ஓதுவதும் இருவர் அதற்கு வாசிப்பதும் என 50 பேர் கொண்ட குழுவுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் கல்வெட்டாக வடிக்கபப்ட்டுள்ளது தஞ்சை பெருவுடையார் கோவிலில்.

நிற்க.

ஞாயிரன்று ஒளிபரப்பான ஆயிரத்தில் ஒருவன் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் நெல்லாடிய நிலமெங்கே எனும் பாடலுக்கு வைரமுத்து அவர்கள், நீலகண்ட சாஸ்திரி முதல் ராசமாணிக்கனார் வரை வரலாற்றை மீள்வாசிப்பு செய்து பாடல் எழுதியதாக தம்பட்டம் அடித்தார். இருந்து விட்டு போகட்டும் - கூடவே நித்யசிரி மகாதேவன் ஒரு தெலுங்கு பாடலை பாடினார். துணுக்குற்றேன் நான்.
சோழர்கள் காலத்தில் ஏது தெலுங்கு கர்நாடக சங்கீத பாடல்??

கர்நாடக சங்கீதத் தந்தையான புரந்தரதாசர் விஜயநகர பேரரசர் காலத்தவர். காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. விஜயநகர பேரரசின் வருகையை முன்னிட்டே தமிழகத்தில் தெலுங்கின் வாசம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஆட்சி மொழியாக இல்லாமல் குமுகாய வழக்கில் பேச்சு மொழியாக. 16-17 நூற்றாண்டில் தெலுங்கு கருநாடக இசையில் - தமிழகத்தில் நுழைகிறது.

இந்த பின்புலத்தில் சோழர்கள் குறீத்த வரலாற்று படமான ஆயிரத்தில் ஒருவனில் (சோழம் என பாடல் வரிகளில் வருகின்றது மற்றும் அவர்கள் பெரியகோவிலை பலமுறை விளம்பரத்தில் காட்டினார்கள்! ) தெலுங்கு பாடல எந்த வரலாற்று அறிவு ஜீவியின் கருத்தமைவு எனத்தெரியவில்லை. துணை இயக்குநர்கள் சற்று சிரத்தை எடுத்திருக்கலாம். தெலுங்கு சோழர்கள் என ஒரு பிரிவு இருந்த போதிலும் இவர்கள் பல்லவ-சோழ கூட்டுறவில தெலுங்கு தேசத்தில் ஆட்சிபுரிந்தவர்கள், தமிழே அப்போதும் ஆட்சிமொழி.

தெலுங்கு முழுவீச்சில் தற்போதைய ஆந்திராவில் வலம்வரத்துவங்கியது கிருஷ்ணதேவராயரின் காலத்தில். அதும் அங்கு - தமிழகத்தில் அல்ல. எனவே தமிழுக்காய் வாழ்ந்து மடிந்த நிகரில் சோழமண்டல அரசர்கள் தெலுங்கு பாடலை கேட்பது செல்வாவின் புண்ணியத்தில் தான்! கடல்கடந்து வென்றாலும் இன்னமும் அவர்களின் கல்வெட்டுகள் தமிழையே தாங்கி நிற்கிறது. கோலார் /பட்கல் என தூரத்து கன்னட கோயில்களிலும், பெங்களூர் கோயிகளிலும் தமிழ் கல்வெட்டுகள் இன்னமும் உள்ளன.

வைரமுத்துவாவது சொல்லி இருக்கலாம். நீலகண்ட சாஸ்திரியும் ராசமாணிக்கனாரும் அவருக்கு புகட்டிய வரலாற்று அறிவு இதுதானா?? வசனம் என்றால் விட்டுவிடலாம், பாடல் என்பது வைரத்தின் இலாகா தானே?? 12 இல்லை 13-14ம் நூற்றாண்டு என்றாலும் அது தமிழிசை தான். தெலுங்கில் கருநாடக சங்கீதம் பாடப்பட்டது மிகச்சமீபமாகவே. அதற்குமுன் திருப்பதிகமும், பாசுரங்களும் நெஞ்சை அள்ளும் தமிழில் கோயில்கள் தோறும் பாடப்பட்ட பொற்காலம் அது.

பரதநாட்டியம் அல்லது பழந்தமிழ் என்றாலே தெலுங்கு பாடல்கள் என்ற பொதுப்புத்தியை எந்தச்செருப்பெடுத்து விளாசுவது எனத்தெரியவில்லை.

வெள்ளி, 24 ஜூலை, 2009

ஐந்திணை ஐம்பது - நூலனுபவம்

வாசித்தல் அவரவர் விருப்பம் சார்ந்தது. தேடித்தேடி வகைவகையாய் படிப்பது நம் நுட்பத்தை வளர்தெடுக்க வழி செய்கிறது. எடுத்ததெற்கெல்லாம் ஆங்கில நூற்களை மேற்கோள் காட்டும் நம் அன்பர்கள், தமிழின் தொன்மையான இலக்கிய சுரங்கத்தின் பெருமையை அறியாதவர்களாகவே இருப்பது வேதனையளிக்கும் உண்மை. பழந்தமிழ் இலக்கியங்களை படித்து மகிழ பெரும் புலமை தேவையென பலரும் நினைத்துக்கொண்டிருப்பதே அதற்கான அடிப்படை என நினைக்கிறேன்.

ஒரு புதிரை அதற்கான நேரமெடுத்து ஆராய்ந்து விடுவிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியே பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் பொருந்தும். இலக்கியங்கள் அதற்கான நிலபரப்பு(திணை), மக்கள், துணைக்கூறுகள் என மிகவும் கவனமாக வடிக்கப்பட்ட சித்திரங்கள். பக்தி இலக்கியத்திற்கு முற்பட்ட சங்கபடைப்புகள் அனைத்தும் இந்த திணைபகுப்பின் கீழ்வரும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய மொழியில் சொல்வதென்றால், கோயம்புத்தூர் குசும்பு, திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லி, காஞ்சி பட்டு என நாம் வகைபடுத்துவது போல.

திணைக்குரிய மக்கள் புரியும் தொழில், நிலப்பரப்பு, வணங்கும் தெய்வம், பறவைகள் முக்கிய உறுப்புகளாக கொண்டு கட்டமைக்கப்படும் சங்க இலக்கியமே இன்று வரையிலான நம் இலக்கிய முன்னெடுப்புகளுக்கான பின்புலம். இந்த அடிப்படை கொண்டு மதுரை திட்டத்தில் (http://pm.tamil.net/akaram_uni.html) மின்பதிப்பாக்கப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை வாசித்து களிப்புறலாம். வார்த்தைகள் புரியாத பட்சத்தில் Dravidian Etymology Dictionary'யின் துணையை நாடலாம். தமிழ் செறிவான மொழி என்பதால், ஒரு வார்த்தை பல அர்த்தம் காட்டும், சூழலுக்கேற்ப பொருத்தி அர்த்தம் காண வேண்டும்.

எல்லாமே வெறுத்துப்போகும் ஒரு சூழலில் நான் பழந்தமிழ் சுவடிகளை புரட்டுவது உண்டு. என்காதல் பெரும்பாலும் சங்கநூல்களே-அகம்,புறம், பதினென்கீழ்கணக்கு நூல்கள் மற்றும் சிலம்பு. விளக்கம்றிய இயலா சூழலிலும் அதை வாசித்துக்கொண்டிருப்பதே நமை பழந்தமிழ் பூவனத்திற்கு இட்டுச்செல்லும். காதலும், வீரமும், விருந்தோம்பல் பண்பாடும், இன்றைய சூழலுக்கு பல மடங்கு மேம்பட்ட நற்கொள்கைகளும் கொண்ட ஒரு Ideal குமுகாயத்தை, இனக்குழுவை அறிந்து வையக்கலாம்.

சங்கநூல்களுக்கு பெரும்பாலும் நான் நூலறிமுகம் செய்வதில்லை. என்னறிவே அரைகுறை இதை மன்றத்தில் வைக்கும் துணிபு இல்லை இது நாள் வரை. என்றாவது ஒரு நாள் ஆரம்பிக்கவேண்டிய ஒன்று என்பதால், துணிந்துவிட்டேன். நாம் வரிந்து கொண்ட கொள்கைகளும், அரசியல் பின்புலமும், சூழல் காரணிகளும் நம் தீர்ப்புகளை தீர்மானிக்கும் காரணிகள் - அதை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் இலக்கியங்களை அனுகவேண்டும். அப்பொழுது தான் அக்கவி சொல்லவந்த செய்தியை முழுதாக உள்வாங்க முடியும்.

பலநூல்கள் இருந்தாலும் தற்பொழுது நான் படித்து மகிழ்ந்த ஜந்தினை ஐம்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சங்கம் பெரும்பாலும் நூல்களுக்கு பெயரிடுவதில்லை. தொகுப்பாசிரியர்கள் தற்காலத்தில் அல்லது இடைக்காலத்தில் இட்டபெயர்கள் இவை. அய்ந்து திணைகளுக்கும் பத்து பாடல்கள் வீதம் அய்ம்பது பாடல்கள் = அய்தினை அய்ம்பது.

இது காட்டில் ஆரம்பித்து(முல்லை)(முல்லை-காட்டில் பூப்பது), குறிஞ்சி(மலையும் மலை சார்ந்த இடமும்)(குறிஞ்சி மலையில் பூப்பது - மலரே குறிஞ்சி மலரே- ஏற்காடு-கொடைக்கானல்-கொல்லிமலை பகுதிகளுல் குறிஞ்சி பூக்கிறது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை-தற்பொழுது ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது), மருதம் (மருத மரம் வயலும் வயல் சார்ந்த இடங்களில் வளர்வது), பாலை மற்றும் நெய்தல் என 5 திணைகளுக்கு 10 பாடல்கள். எனவே ஐந்திணை ஐம்பது.

காதலின் சுவை காத்திருத்தல், பிரிதலின் வலியுணர்தல், தலைவனின் வரவை நோக்கி வழிகாக்கும் விழியினள் ஆதல். காதலின் பொருண்மை பெண்களை முன்னிறுத்தியே பாடப்படுகிறது. காலந்தொறும் அவர்கள் காத்திருப்பவர்களாகவும், வினை வழி பிரிந்த தலைவனின் நிலை குறித்து அஞ்சுவது போலவும், அவன் வராமை கண்டு சினங்கொள்வதும், கண்ணீர்விடுவதும், இயற்கையை நோக்கி தன்நிலை கூறி புலம்புவது போலவும் பெரும்பாலும் பாடல்கள் வடிக்கப்படுவது இயல்பு.

இதில் கவிஞரின் கற்பனைத்திறன், புலமை, உவமையின் செறிவு ஆகிய உறுப்புகளின் அடிப்படையில் பாடல்களின் சுவை அமையும்.

இனி திணைக்கு ஒன்று வீதம் 5 பாடல்களை பார்ப்போம். ஆசிரியர் மாறன் பொறையனார்.

திணை: முல்லை (காடும் காடு சார்ந்த இடமும். - அக்காலத்தில் முல்லை காட்டில் ஊன்றி படர்ந்திருக்கும்)
ஒழுக்கம்: ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி!
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீமை கொண்டன தோள்

தலைவன் வினைவழி பிரிந்து சென்றிருக்கிறான். கார்காலத்திற்கு முன்பே வந்து விடுவேன் என உரைத்துச் சென்ற தலைவன் இன்னமும் வந்து சேரவில்லை. தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள்- பணிமொழி மயில் கூவ மலைமேல் வந்தாடும் கார்மேக மழையை காணும்போதெல்லாம் என் தோள்கள் என் கண்ணீரைக் கண்டது. மலைமேல் பொழியும் மேகம் போல் என் கண்ணீர் என் தோள்மீது வழிகிறது.

என்ன ஒரு இலக்கிய சுவை பாருங்கள். மயில் கூவியதற்கு இரங்கி அந்த மழை பொழிகிறது. நான் இங்கு காத்திருக்கிறேன். என்னை தேடி அவர் இன்னமும் வரவில்லை! மஞ்ஞை -மயில்.

குறிஞ்சி: மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம்: புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ- நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா.

முல்லை திணையை சேர்ந்தவன் என்னுடன் கலக்கமாட்டான் என வருத்தப்படாதே மான்விழியாளே, அருவி என்றும் மலைமீது வழியவே விரும்பும், விலகி நிற்காது. அதுபோல தலைவனும் உன்னைச் சேரவே விரும்புவான், தள்ளிநிற்க மாட்டான். :)

புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திருந்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.

பொன்போன்ற பூந்தழை (தாழை-தாழம் பூ) சூடிய அல்குல் பெண்ணே, சாரலுக்கு நாம் காத்திருக்குக்கையில், ஏதே வேலை நிமித்தம் போல்வந்து நம்ம்மிடம் பேசிய தலைவன், நம்மிடம் உண்மையிலே கேட்க எண்ணியது ஒன்றுண்டு. சூழல் கருதி அமைதியாக சென்றுவிட்டார். (நூல் விடுவது - நா இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன், உங்க வீடு இந்த பக்கமா இருக்கு? சரி நேசம்ணி பொன்னையா தெரு எங்க இருக்கு?? :) )

மருதம்: வயலும் வயல் சாந்த இடமும்
ஒழுக்கம்: ஊடலும் ஊடல் நிமித்தமும்

போதார்வண்டு ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறிவயர்ந்து எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறி அதுகாண் எங்கையர் இற்கு.

தூது போகும் தலைவனின் நண்பன் நன்றாக வாங்கி கட்டிக்கொள்கிறான் தலைவியிடம். ஊடல் ஒழுக்கம் என்பதால் தலைவியின் கோபம் கொடிகட்டி பறக்கிறது. (வடிவேலு: திஸ் பிளட்? சேம் பிளட்! )

திணை : பாலை (மணல்வெளி - குறிஞ்சியும் முல்லையும் திரிந்த இடம்)
ஒழுக்கம்: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

இந்த கதை பல படங்களில் பிய்த்து தொங்கவிடப்பட்ட கதை. இத்துணை மென்மையான இதயங்கொண்ட காதலர் என்னை எப்படி பிரியத் துணிந்தார் என தலைவி பிரியும் காதலன் குறித்து கவலையுறுகிறாள். :(

திணை: நெய்தல் (கடலும் கடல் சாந்த இடமும்)
ஒழுக்கம்: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்.

பிரிவதற்கு முன்பு மகிழ்ந்திருந்த பூம்பொழில் காணும்போதெல்லாம் மனம் அவனை நினத்து ஏங்கியது, வருத்தம் தாங்காமல் நான் கண்சிவக்க அழுதேன். வீங்கிய முகம் கண்ட அன்னை, என்ன ஆயிற்று? எதற்காக அழுதாய் என கேட்க.. நான் கடல் வந்து என் மணல் வீட்டை அழித்தது என்று கூறீனேந் என தலைவி பாடுகிறாள்.

இங்கு பிரிவு கடல் போலவும், அவளின் மகிழ்வு மணல் வீடு போலவும் உவமைபடுத்தப்படுகிறது. கேட்ட அன்னைக்கு சும்மா ஒரு பொய்யை சொல்லி பசப்புகிறாள். பெரும்பாலான காதலின் துன்பம் இவ்வாறாகவே அமைகிறது.

களவொழுக்கம் அக்காலத்தில் இயல்பான ஒன்றென்பதாலும் பெண்கள் மிகவும் கவலைக்குள்ளாகின்றனர். சென்ற காதலன் விரைவில் வந்து கைபிடிக்கவில்லை என்றால், ஊரார் முன் தன் குடும்ப மானம் போய்விடும் மற்றும் உடலும் காட்டி கொடுத்து விடும். எனவே பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இப்போதிருக்கும் அத்துணை இடர்களும் அந்த காலத்திலும் இருந்தது. பெண்களின் கண்ணீர் சங்க இலக்கியம் முழுவதும் இறைந்து கிடக்கிறது.

இலக்கியம் வெறும் சுவை இல்ல. அது வாழ்க்கை. பல்வேறு பெண்களின், ஆண்களின் நிலையை கண்டு உணர்ந்து படைக்கப்பட்ட காலக்குறிப்பு. காதலின் இன்பம், வலி, பிரிவின் வேதனை, இயலாமையின் கோபம் என பண்முக குறிப்புகளை நாம் சங்க இலக்கியத்தில் அறியலாம். இன்றளவிற்கும் அப்பாடல்கள் காட்டும் காதல் உலகம், நம் மனதிற்கு மிக நெருக்கமாய், நம் முன்னேர்கள் பட்ட உயரிய பாடுகளை நமக்கு விளக்கிச்செல்கிறது.

ராசேந்திர சோழரின் சிலை கர்நாடகாவில்

சோழவளநாட்டின் மீதான தீராக்காதல் நாடந்தாய் வாழி காவேரி என சங்ககாலம் முதல் கவிஞர்களின், அரசர்களின் கனவுத்ததேசமாய் சிறப்புற்ற தேசம். அணைகளின்றி கரைபுரண்ட அகண்ட காவிரியை இப்பொழுது நினைத்தாலும் மனம் சிறகுமுளைத்த தும்பியாய் அந்தப்புனலில் நீராடி மகிழ்வுறும். காவிரிக்கரை தந்த இலக்கியமும், ஆட்சிமுறைகளும் வீரமும் வரலாற்றின் பக்கங்களில் தனிக்கவனத்தை பெற்று நிகரில்சோழம் என்பதை உறுதிசெய்வது.

காவிரி தோன்றிய காலந்தொட்டே சோழர்கள் அதன்மீது தனிக்காதல் கொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். கரிகாலன் - கல்லணை- காவிரி இன்றும் ஓர் தீராக்காதல் கதை. அந்தச்சோழ வரிசையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெரும்புக
ழ் கொண்ட ஓர் அரசன் உதித்தானென்றால் அது ராசேந்திர சோழன் மட்டுமே. கடல்கடந்து தேசங்களை தன் காவிரிதேசத்துடன் இணைத்த இணையில் சோழ அரசன் அவர்.

கங்கையை கொண்டுவந்து சோழபுரத்தில் அமர்த்தி, கங்கைகொண்ட சோழபுரத்தை படைத்தவன். தன் தந்தைக்கு தஞ்சை என்றால், தன் பெயர் சொல்ல ஒரு நாட்டை உருவாக்கி அங்கிருந்து அடுத்த 200 ஆண்டுகள் சோழ பரம்பரை ஆட்சி புரிய அடித்தளம் இட்டவன் இராசேந்திரன். தமிழக அலெக்சாந்தர் என்றால் அவன் மட்டுமே. அலெக்சாந்தரும் கடல் கடந்து போர் புரிந்தது இல்லை. பகை அஞ்சும் தகை சால்பு ஒன்றே அரசனின் தனிச்சொத்து, அதன் முழு உருவம் ராசேந்திரன்.

தெற்கு என அந்நாளில் அறியப்பட்ட ஒட்டுமொத்த நிலப்
பரப்பும் ராசேந்திரனின் கீர்த்தியை பாடி நின்றது. கங்கைகொண்ட சோழபுரத்து கோவில் எனும் அழகிய கலைப்பொக்கிசத்தை நமக்கு விட்டுச்சென்ற கலைரசிகன். அந்தகைய தகைசான்ற தமிழனின் சிலை, இன்றைய கர்நாடக கோலாரில் இருக்கிறது என்ற செய்தியை கேட்டபின்பு நிலைகொள்ளவில்லை எனக்கு. உடனே வண்டியை கிளப்பிவிட்டோம் கோலாரை நோக்கி.

பெங்களூரில் இருந்து 70 கீமி, பழைய சென்னை ரோட்டில் அமைந்து இருக்கிறது கோலார். தங்கத்துக்கு பெயர்போன கோலார் தான். ஊர்க்கோடியில் கோலாரம்மா கோயில் அரசு தொல்பொருள் துறை வசம் உள்ளது. கோயிலை பார்த்த உடன் ஒரு குதூகலம் எங்களை சூழ்ந்து கொண்டது, ஏனெனில் அது ஒரு சோழக்கோயில். சோழர்களின் கையெழுத்து படைப்பான “மொட்டை கோபுரம்” நம்மை வரவேற்கிறது
.

நுழைவாயில் பெருந்தூணை பிற்கால கிருஷ்ணதேவராயன் அலங்கார வேலைப்பாடுகள் செய்து சிறப்பித்துள்ளார். அதில் அவரின் சிலை ஒன்றும் இருக்கி
றது. மொட்டை கோபுரம் தாண்டியதும் கொடிமரம் அப்புறம் பலிபீடம். அதன் பின்பு சிறு தூண் கொண்டு நிறுவப்பட்ட மண்டபம் அல்லது திண்ணை போன்ற அமர்விடம். அந்த தூணில் சேனாவதி சோழசோழ சோழியவரையன் என்று எழுதப்பட்டு இருக்கிறது.

உள்ளே நுழைந்தால் இரண்டு கருவறை- ஒன்று கிழக்கு நோக்கி ஒன்று வடக்கி நோக்கி. கோவில்ன் சுவர்களெங்கும் அங்கிங்கெனாதபடி கல்வெட்டுகள். கருவரையின் பின்புற சுவற்றில் இருந்து கல்வெட்டு ஆரம்பிக்கிறது “ திருமன்னி வளர இருநிலமடந்தையும் போர்செயப்பாவையும்” என மிகப்புகழ்பெற்ற ராஜேந்திரரின் மெய்கீர்த்தி ஆரம்பிக்கிறது.

கருவறைக்குள் நுழைய பக்திமான் போல நடிக்க வேண்டியதாயிற்று. :). உள்நுழைந்ததால் கிடைத்த மற்றொரு பரிசு, கருவறக்கு நேரெதிரே ஒரு தூணில் ராசேந்திரரின் மெய்கீர்த்தி. 70 வரிகள் கொண்ட ராசேந்திரரின் மெய்கீர்த்தியில் முழுதும் இடம்பெற்றீருப்பது முழுவதும் அவர் வெற்றிகொண்ட நாடுகளே எனில் அந்த பேரரசனின் தீரம் எத்தகையதாக இருந்திருக்கும்?

இனி புகைப்பட ஆவணம்.



ராசேந்திரனின் போர்க்கோலக்காட்சி அவரின் தீரத்தை வீரத்தை கல்லில் வடித்து காலத்தில் சமைத்துவிட்டது. ராசேந்திரனின் சிலையை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ராசேந்திரரின் ஆட்சிக்காலத்தில் பிடரி என்றழைக்கப்பட்ட கோலாரம்மா கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் குறித்த கல்வெட்டு கோயில் முழுவதும் வரிகளாய் வழிகிறது.

பெங்களூரில் இருக்கும் ஆர்வலர்கள் சென்று கண்டு களிக்கலாம். மிகவும் குறைவான தூரம்-2மணி நேரத்தில் கோலாரை அடைந்து விடலாம். சாலையும் நன்றாக இருக்கிறது. ராசேந்திரனின் மெய்கீர்த்தி சொல்வது போல் போர்செயச் செல்வி அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு துணை இருந்ததால், தோல்வியை கண்டறியா உலக போர்ப்படை தலைவர்களின் வரிசையில் ராசேந்திரரின் பெயரும் இடம் பெற்றிருப்பது ஒரு சிறப்புச்செய்தி.

செவ்வாய், 14 ஜூலை, 2009

எயில் நாடு

நுளம்ப பாடி என இராசராசனின் மெய்கீர்த்தியில் குறிக்கப்படும் கிருட்டிணகிரி, எயில் நாடு எனவும் வழங்கப்பட்டிருக்கிறது. எயில் கொப்பம் - ராஜராஜேந்திரன் மெய்கீர்த்தி.

மலைகள். காணுமிடமெல்லாம் மலைகள். கொல்லிமலையில் ஆரம்பித்து தருமபுரி கிருட்டிணகிரி-ஒசூர் வரை மலையும் மலை சார்ந்த இடமும் என குறிஞ்சி திணைக்குரிய நிலப்பரப்பு, எயில் நாடு என்று வழங்கப்படுகிறது இடைக்காலத்தில். சமீபத்திய ஆய்வுகள் கற்காலந் தொட்டு ம்னிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான் சான்றுகளை கண்டுபிடித்துள்ளன. குகை ஓவியங்கள் அதிகமாக கிடைக்கும் ஒரு மாவட்டம் கிருட்டிணகிரி.

விடுகாதழகிய நாடு எனவும் இப்பகுதி குறிக்கப்பட்டிருக்கிறது. சவ்வாது மலை ஏலகிரி மற்றும் அள்ளி தெளித்தது போல் எங்கும் குறுமலைகளாக காட்சியளிக்கும் இந்நிலப்பரப்பு, நான் பார்த்து, வியந்து, துய்த்து வளர்ந்த பகுதி. நடந்தாய் வாழி காவிரி என இளங்கோ பாடிய பொன்னி தமிழ்நாட்டில் முதலடி வைக்கும் எயில்தேசம். அவளின் தங்கை தென்பெண்ணையும் பாய்ந்து வளம்நிறைக்கும் சீரிளமை நாடு.

அந்த பின்புலத்தில் இந்த வலைபதிவிற்கு எயில்நாடு எனப்பெயரிட்டுள்ளேன்.

வலைப்பதிவு காப்பகம்