வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மழைமோகம்

நீ புன்னகைத்த நொடி
மலர்ந்த பூக்கள்
உதிர்வதேயில்லை
சிலிர்த்து நகைத்தது
தோட்டத்து பூச்செடி
வானம் பார்த்தேன்
கொத்துக் கொத்தாய்
மினுமினுத்தன
நம்முத்தங்கள்

நுதல் தீண்டி
இதழ்நனைத்து
மலைஇழிந்து
இடைபரவி
உனைஅடையும்
இம்மழை
மோகத்தாலானது

கனவில் அணைத்ததாய்
சொல்லிச்சொல்லி
வெட்கப்பட்டாய்
அதன்பின் நடந்ததை
சொல்லவே முடியாமல்
வெட்கம் கசிந்தேன்

திங்கள், 13 செப்டம்பர், 2010

நிகழின் மணல்

முடிவிலாக் கனவின்
முடிச்சவிழும் இளகிய
பொழுதொன்றின் குரல்வளை
நெறித்தாய் கனவின்
உதிரத்துளி நினைவின்
வாசமெங்கும் வலியரற்றி

பிரிவின் பெரும்புனல்
நனைக்கும் கரையெங்கும்
நினைவின் ஈரம்
நிகழின் மணல்வெளி
வெறித்த ஒற்றைமேகம்
ஒப்பாரியில் கரைபுணரும்
அலையறியா ஆழ்கடலில்
ஆதியின் மெல்லிருள்


கால் மாற்றி
கால் மாற்றி
நீ ஆடும்
நடனத்தின்
தாளம் நான்
மிதிபடும் இதயத்தின்
பாடல் ஒலிக்கும்
தூரத்து மழைவனத்தில்
தகதிமி என மலரும்
பூக்களின் வாசம்
பௌர்ணமி இரவில்
பாடலாய் உருக்கொள்ளும்
இரகசியம் சலசலத்து
மருண்டது ஓடை.

வியாழன், 9 செப்டம்பர், 2010

பனிமுத்தம்

இரவின் பகல்
மெழுகாய் உருகும்
முழுநிலாப் பொழுதில்
தேவதைகள் தவறவிட்ட
வெண்முத்தின் ஒளிச்சிதறல்
எனக்கான உன்மோகநகைப்பில்

நதிக்கரை நாணல்
தீண்டிமீளும் வாடைக்காற்றின்
வாசம்கொண்டவள் நீ
உனக்காய் கரையும்
என்பொழுதுகளை நிறைப்பது
அலைநுரையின் மென்மைபழகும்
அதரங்களின் வண்ணம்


டிசம்பர்மாதப் பூவில்தேங்கிய
தேனின் சுவைகொண்டதுன்
முத்தமென்றேன் இல்லையென
இடம்வலமாய் அசைந்தகுழலால்
கார்காலத் துளிதானென்றேன்
சட்டென நீநிகழ்த்திய முத்தத்தில்
பட்டென விளங்கியது
முன்பனிக்காலத்தின்
மென்பனியாலனது
உன்முத்தச்சுவை

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீர் வளையம்

நீர்ப்பிரி அலையும் வெளி
கிழித்து குடைவிரிக்கிறாய்
நீமிதித்ததில் தரையெங்கும்
நீர்வளையம்
நீர்நீராய்
வ்ளைவளையாய்

சுவர்தொட்டு திரும்பி
உனைகாணாமல்
வான்நோக்கி வெறித்திருந்தன
நீர்வளையாய்
நீண்டவழி

கரைந்த மேகம்
விரைந்து வழியும்
உன்குடை நுனிகளில்
மழைக்கண்ணீர்
தீண்டாமை ஒரு
மழைத்தன்மையற்ற
செயல்

நீர்வளையம் துளைத்த
மழைக்கண்ணீர் சபித்தது
வெளியெங்கும் கருமழை
பிரளயம் இடிமின்னல்

புதன், 25 ஆகஸ்ட், 2010

மழைநேரப் பெருங்காதல்

நீ ஈரம்துவட்டும்
மழையின் நிறம்கொண்டது
மோகம்

உன் புருவம்வழியும்
துளியின் சுவைகொண்டது
தாகம்

உன் இமைகள்மறைக்கும்
வெளியின் ஒளிபூசியது
காமம்

நீர் முத்துவிளையும்
கார்கூந்தல் கடல்மூழ்க
காதல் சுவாசிக்கிறேன்

காதலின் பெருமழைக்காலம்
நீ
நீ
மழைநேரப் பெருங்காதல்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இச்சைபிதற்றி

மழைநீர் நடமிடும்
உன்மேனியெங்கும்
செம்மல்லியின் வாசம்

அபிநயிக்கும் உன்விரல்களில்
அத்தனை பறவைகளும்
ஒளிந்திருப்பதாய் சொன்னேன்
தேடிப்பிடித்து நீயே
எடுத்துச்செல் என்றாய்
சுண்டுவிரல் தேன்சிட்டு
மோதிரவிரல் மணிப்புறா
நடுவிரல் வெண்மயில்
சுட்டுவிரல் பச்சைக்கிளி
கட்டைவிரல் கருங்குயில்
நொடிக்கொரு கிளைமாறி
கானகமாய் விகசித்த
விரல்பறவைகளின் ஒற்றைக்குரலில்
வலைமறந்த வேடன்நான்
சொடுக்கெடுத்த நேரத்தில்
இச்சைப்பிதற்றியது பச்சைக்கிளி.


காற்றுடைத்த காட்டுமல்லி
வாசம்கரைந்த ஓடைக்கரையில்
துள்ளிதுள்ளி சேறாடியது
ஒத்தக்கெளுத்தி
நீராய் கழிந்தபொழுதின்
வாசமாய் எரிந்தன
நம் அந்திமாலை
பரிதவிப்புகள்.

வியாழன், 22 ஜூலை, 2010

தீண்டும் சுகம்

தீண்டும் சுகமறிய
நீளும் விரல்கள்
மீளும் வெட்கம்
நிரம்பி வழியும்
காமம் இடைவெளி
நிறைக்கும் அறிந்தறியா
உணர்வில் வேட்கையின்
பேரிரைச்சல் பழகும்
விழிகளில் ஆழ்கடல்
மௌனம் தவிப்பின்
இருள்பூசி நதிகலக்கும்
பெருவெளி நுரைகளில்
ஏக்கம் சுமந்து
பெருங்காமக் கடல்

புதன், 26 மே, 2010

த.பா.ச - தகப்பனால் பாதிக்கப்பட்டோர் சங்கம்

பதின்ம வயதின் தனித்த அடையாளங்களில் ஒன்று, தகப்பன்களிடன் அடிக்கடி ஆப்பு வாங்கிக்கொள்வது. தீராத சண்டை தினமும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு நிகழ்ந்துகொண்டே இருக்கும். அனைத்து வீட்டிலும் இது நீக்கமற நிறைந்திருந்ததால், 11,12 வகுப்பு படிக்கையில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து த.ப.ச ஆரம்பித்தோம்.

அன்றாட பாதிப்புகள் மற்றும் அடிதடிகளுக்கு ஏற்ப, தகப்பன்களுக்கு அர்ச்சனை நடக்கும் மாலை நேரத்து சங்க கூட்டங்களில்., ஒருமையில் கடுப்படிப்பது முதல், கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது முதல் தங்கள் கோவத்தை பதிவு செய்து மற்ற உறுப்பினர்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெறுவார்கள் நண்பர்கள்.

அடிதடியில் முகம் வீங்கி, சைக்கிள் வசதி பிடுங்கப்பட்டு, அல்லது சாப்பாடு போடாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்டு, பாக்கெட்டில் கைவைத்து அடிவாங்கி, தம்மடிக்கையில் பிடிபட்டு என பாதிப்பு பல வடிவங்களில் இருக்கும். நித்தியும், பிரகாசும் ஒரே துண்டுபீடியில் ஒட்டுமொத்த கவலையையும் ஊதித்தள்ளிவிட்டு, அடுத்த பீடியை தேற்றுவதற்கான முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.

எல்லோர் வீட்டிலும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. பிள்ளைகளின் தவறா அல்லது பெற்றோரின் தவறா என்ற மனோதத்துவ ஆராய்ச்சிக்கெல்லாம் இறங்காமல், அனுதின சண்டைக்கு மாலை நேரத்து அர்ச்சனைகளின் மூலம் அமைதிகண்டு, பொழப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்கள் அனைவரும். என்பங்குக்கும் ஏகப்பட்ட சண்டைகள் போட்டதுண்டு. வண்டி துடைப்பதில் ஏற்பட்ட தன்மானப் பிரச்சனையில் கடைசிவரை என் தந்தையின் வண்டியை பயன்படுத்தாமல் நடந்தே சென்று நடந்ததே வந்ததுண்டு. நானாக வண்டி வாங்கும்வரை அவரின் வண்டியை தொட்டதில்லை நான்.

அந்த வயதில் ஏற்படும் காயங்களும் மிக ஆழமாக மனதில் பதிந்துவிடுவதால், கடைசிவரை அந்த கசப்பு குறைவதே இல்லை. பெரும்பாலான ஆண்கள், தந்தையாக இருப்பதறகான அடிப்படை தகுதிகள் அற்றவர்கள் என்பதே கண்கூடு. இனிவரும் காலங்களில் அந்த சமன்பாடு மாறலாம். கல்வி அறிவு மட்டுமே அந்த தகுதியை தந்துவிடாது என்பதே என்கருத்து. அடிப்படை மனித அன்பு, பொறுப்புணர்ச்சி, ஈகோ இதெல்லாம் உறவுகளை நிறுவும் காரணிகள் என்பதால், ஆண்கள் அந்த ரோலில் பெரும்பாலும் டக் அவுட் ஆகிவிடுகின்றனர்.

சிலநேரங்களில் தகப்பன்களின் தொல்லை ஒரு மோட்டிவேட்டராக செயல்பட்டு பிள்ளைகளை பொறுப்புடன் இருக்க தூண்டும், ஆனால் இது மிகவும் அரிதே. பிள்ளைகள் மிகவும் பலவீனர்களாக இருக்கும் பட்சத்தில் போதை, பொறுப்பின்மை என வாழ்க்கையை தொலைத்துவிடுவதுண்டு. நாம் எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் பெற்றவர்களை பார்த்து கேட்கும் கேள்வி: என்ன எதுக்கு பெத்த? நான் உன்ன பெத்துக்க சொன்னேனா? என்பது தான். அதை நம் பிள்ளைகளும் நம்மை பார்த்து கேட்காம இருக்குமளவுக்கு நடந்துக்கவாவது முயற்சிப்பது நமதுஅடிப்படை கடமை என்றே நினைக்கிறேன்.

என்னோட பாஸ் அடிக்கடி சொல்லுவார், எந்த குழந்தையும் என்ன பெத்துக்கோ பெத்துக்கோ என நம்மள கெஞ்சுறதுல்ல, நாமளா பெத்துக்கறப்ப அந்த குழந்தைய கவனமா வளர்ப்பது தான் நம்ம் கடமை’ன்னு. அன்னை வளர்ப்பில் அனைத்து குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான்.. ஆனால் அது தந்தைகள் தலையிட்டபின்பு கனவுகளை சிதைத்து, தலைமுறைகளையே அழித்துவிடுகிறது என்பது கவனிக்கப்படாத உண்மை. இப்படிக்கு தகப்பனால் பாதிக்கப்பட்டோர் சங்க நிறுவனர். :(

வெள்ளி, 7 மே, 2010

இதுவுமது

இன்றுதான் தலையுயர்த்தி பார்த்தேன்
நின்று சிறிது பேசவும் செய்தேன்
தீண்டியபடி சிறிதூரம் நடக்கையில்
மென்மையின் குறுகுறுப்பு
ஒவ்வொரு தீண்டலும்
வேறாகவும் ஒன்றாகவும்
பதில்கள் அற்ற அமைதியில்
வேர்விடும் சுயத்தில்
உயிர்ப்பின் வாசம்

எலியைத் தடவும்
எழவெடுத்த வாழ்க்கையில்
நேரம்கிடைக்கையிலே
கேட்டுவைக்கலாம்
இவ்வளவு நெருக்கமாக
வளரும் வாழ்வில்
என்றேனும் அடித்துக்கொண்டதுண்டா
தோட்டத்து புற்கள்?

புதன், 28 ஏப்ரல், 2010

புறக்கணிப்பின் நெடுந்துயரம்

கடந்து கொண்டிருப்பதின்
நினைப்பற்று
கடந்து கொண்டே
காலம்
கால்மாற்றி கால்மாற்றி
பின்னும் வலைகளில்
இரையாகி விரிகிறது
நினைவுப்பெருவெளி

ஏதோ ஒரு இழையை
குருதி கொப்புளிக்க
அறுத்துச் சென்றது
கருவேலமுள்ளின்
கூர்நுனியொத்த
புறக்கணிப்பின்
நெடுந்துயரம்

இலக்கற்று வெறிக்கும்
தண்டவாளப் பார்வைகளில்
மரணித்த கனவுகளின்
இறுதிப்பயணம்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

மழையாய் மழைத்தல்

நேற்றிரவு
மழை
பெய்தது
முன்பும்
பலமுறை
நிற்காமல் பெய்த
நம்முதல் தீண்டல்
கறுத்த இரவைப்போல

மழை பெய்தபடியே
இங்கில்லாவிட்டால்
எங்காவது
வெயிலைப் போலவே
மழையும் அனுதினம்

மொழியின்
அடைமொழியில்
மூச்சுத்திணறாமல்
மழையாக மட்டுமே
பெய்தது அடைமழை

மழையாய் மழைத்தல்
மழையால் மட்டுமே
ஆகக்கூடியது

புரியத்தருகிறாய்

புரிந்துகொள்ளும் படியான
வார்த்தைகளில் நிகழ்வதில்லை
இயல்பான தருணங்கள்

புரிந்துகொள்ளும் வார்த்தைகளில்
விவரிக்கும் பொருட்டே நிகழ்கிறது
வீசியெறியப்படும் அனைத்து
கவிதைகளின் முதல்வரியும்

புரிந்துகொண்டதை
புரிந்துகொண்டதாகவே
புரிந்துகொள்ளும் என்புரிதல்களில்
புரியாத ஒருதருணமாகவே
புரியத்தருகிறாய் நீ.


புதன், 21 ஏப்ரல், 2010

இசையாய் புணர்ந்தவெளி

இளையராஜாவின் பாடல்களில்
மட்டுமே காதல் இன்னமும்
வாழ்வதாக நாம் கொண்டிருந்த
நம்பிக்கை இன்றளவும்
தன்னை புதுப்பித்து
வழிகிறது ஏமாற்றம்
புனைந்த விழியோரம்


நினைவுகளின் அடுக்கில்
நுழைந்து நம்மை குதறும்
சூழலின் வண்ணம்
வெறுமை நிறைந்த
இருளின் நிறமாகவே
இருப்பது தற்செயல்
ஒற்றுமையல்ல
தீண்டல் விளையாட்டின்
வெறித்த விட்டங்கள்
பிரிவின் வலிஅறிந்தவை
வண்ணங்கள் அற்றவை

கால்கள் புணரும்
பலகையின் ஓலம்
அறையை நிறைக்கும்
சீரற்ற நகர்வில்
தொக்கிநிற்கும் வெறுப்பின்
வலியுணர்ந்து தரையலறும்
இருளை குடிக்கும்
ஒலியின் ராகம்
ஒப்பாரி என்பது
உன்னைப்போலவே
எங்கோ வெறிக்கும்
இருள்மூலைகள் மட்டுமே
அறிந்த ரகசியம்

வெளியில் மிதக்கும்
இசையின் துண்டொன்று
எந்நொடியிலும் துளைக்குமென்ற
எதிர்பார்ப்புடனே அனுதின
புணர்வின் களம்
வறண்ட கண்ணீரை
மொழிபெயர்த்தறியும் குழலின்
துளைகளில் நிகழும்
வன்புணர்வில் குறிகளின்
குறிப்புகள் அல்லது
இசையாய்ப் புணர்ந்தவெளி

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நீநானிருளொளி

பின்னோக்கிச் சென்று
உன்னில் இருத்தல்
என்றாகிவிட்ட வாழ்வில்
நாம் மழைக்கு
ஒதுங்கிய மரங்களை
கண்டடைவது சிரமமாக
இருக்கவில்லை
எப்பொழுதும் நிற்கும்
அதே மரங்களின் மீது
பெய்த மழையை
எதிர்கொள்கிறேன்
எதிர்பாரா அவசர
நாட்களில் முன்போல
புதிராய் தெரிவதில்லை
என்றாவது கலையும்
முன்முடி கோதும்
விரல்களை எனதாக
நினைக்க மறுத்து
தீண்டல் கனவுகளில்
அலைபாய்கிறது
என் பதின்மத்தின்
சொச்சங்கள்
கலைத்த காற்றை
கண்டடைவதும்
எதிர்பாராமல் நடந்து
தொலைக்கிறது
அவ்வப்போது சிலமுறை

முன்பனி காலத்து
பின்மாலைப்பொழுதில்
நாசிநுனியில் பூசிய
குளிரை வெடுக்கென்று
பறித்த இளஞ்சூட்டின்
ஆதியும் அந்தமும்
அறியும் நிமித்தம்
இருளின் மென்மை
எழுதிய வரிகளில்
இடறியமேடுகள்
சமைத்த காலத்தின்
எல்லை எக்காலமும்
நான் கடந்திடமுடியா
பின்முன்மேல்கீழ்
நீநானிருளொளி
கரையும்சுகம்
கலையும்சுயம்
மயிர்கால்கள்
உயிர்பெற்று
வழியும்லயம்

திங்கள், 19 ஏப்ரல், 2010

நமக்கான ஒருமழை

என்னைப் போலவே நீயும்
உன்னைப் போலவே நானும்
முடிவில்லா கேள்விக்கு
முட்டாள்தனமான
விடைகளில்
பெருமூச்செரித்தெரிய
உன் கோவத்தில் என் காதலும்
என் கோவத்தில் உன் காதலும்
அலைகழிகிறது மாலைக்காற்றில்
இலவுவெடித்த வெற்றுப்பஞ்சு

காதலை சுமந்து திரிந்த
பருவ நத்தைகள் நாம்
உன் உலகம் உனக்கானது
என் உலகம் எனக்கானது


கருமழை முன்னிரவில்
நாம் ஒடுங்கிய குடை
அறிந்திருந்தது
நமக்குள் வறண்டிருந்த
பொட்டல்வெளியை

சவரம்செய்து
கட்டிப்பிரிந்து
நாள்முழுதும்
திரைவெறித்து
பிணமாய் நகரும்
வாழ்க்கை உனக்கும்
வாய்த்திருக்கும்

ஊடாடும் கனவுகளில்
உச்சமடையும் உன்
இயலாமை என்னையும்
பிய்த்தெறிந்து
ஓலமிடாது அனுதின
இரவுகளில்
குடைதுறந்து
நமக்கான ஒருமழையை
நீ பெய்வித்திருந்தால்

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வானவில் தீண்டல்

உன்னை பார்த்து ஒருநிமிடம்
தான் ஆயிற்று அதற்குள்
கணிணித் திரையில்
கவிதை வரிகள்

இதயம் இருப்பதை
நிறுத்தி நிறுத்தி
உணர்த்துபவள் நீ
கண்கள் இருப்பதை
வெறித்து வெறித்து
ரசிப்பவன் நான்

இதுவரை எழுதிய
கவிதைகளில் உனக்கான
ஒன்றை தேடிவைத்தேன்
உன்பெயரை கண்டநொடியில்
கூட்டுத்தற்கொலை
குறிப்பெழுதிவைத்தது
கவிதைகள்

நீ ஒரு sweet romance
Post Modernism புக மறுக்கிறது
வரிகள்

அருவித்துரும்பு நான்
வீழ்ச்சியின் ஈரத்தில்
உன் வானவில்
தீண்டல்

வியாழன், 15 ஏப்ரல், 2010

முயத்தலின் மழைக்காடு

பேனா முனையில் துயிலும்
கவிதையென சிறகுகளின்
மென்நுனியில் கண்விழித்தது
இன்றைக்கான பறத்தல் தூரம்

தொலைவின் அளவை
வேர்நுனி அளக்குமா
இலைதழுவும் காற்று
அளக்குமா பயணத்தின்
கனவுகளில் வானம் மட்டுமே
தொடக்கிடைக்கும் தூரத்தில்

உன்முத்தத்திற்கு பின்பும்
பெய்துகொண்டிருந்தது மழை
நீதான் முத்தமழையா
நீ அணைப்பதற்கு முன்பே
எரிந்துகொண்டிருந்தது
மயிர்க்கால்களின் வழியே
தொன்மத்தின் முயத்தல்
கங்குகள்

முயத்தல் மழை இன்னமும்
சொட்டிக்கொண்டிருக்கும்
இலைநுனி கலைக்கும்
நினைவின் அடுக்குகளில்
வெளிறிய அல்குலின்
மெல்லிய துடிப்புகள்

இடைவெளி தொலைந்த
இடைகளின் வெளியில்
உயிர்பெற்று விரிந்தது
ஒளியும் நுழைந்தறியா
மழைக்காடு

புதன், 31 மார்ச், 2010

Big Bang and a Muslim Friend

நேற்று அரைதூக்கத்தில் cab ஏறினேன். பெரும்பாலும் அந்த நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்துவதே வழக்கம். தூங்க வசதியாக கண்ணாடியும் அணிந்தாகிவிட்டது. மழை வருவதற்கான முன்னறிவிப்புகள் மெல்ல தலைகாட்ட, வெயில் சற்று அதிகமாகவே தீட்டியது.

பக்கத்திலிருந்த நண்பர், மெதுவாக ஆரம்பித்தார். இந்த Big Bang அப்படின்ன என்ன? மனுசன் தெரிஞ்சுகிட்டு கேக்குறானா தெரியாம கேக்குறானான்னு தெரியல. மேலாண்மை தொழிலில் இது ஒரு தொல்லை. ஆங்கிலம் அருமையாக பேசுவதால் அறிவாளிகள் என முடிவுக்கு வந்து விட முடியாது. அவர் மேலும் ஒரு அடி நீளத்திற்கு தாடி வைத்திருப்பதால் அந்த எண்ணம் இன்னமும் உறுதியாகிவிட்டது. மேலும் இவர்களின் கல்வி பின்புலமும் அறுதியிட்டு கூற இயலாதது.

IT எனில் எல்லோரும் CS /MCA என முடிவு செய்துவிடலாம். ஆனால் டேமேஜர் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் இல்லை. பொட்டுகடலை, புண்ணாக்குவிக்கிறவன் முதல் bsc bcom ba அது இது என பல பின்புலத்திலிருந்து வேலைக்கு வந்திருப்பார்கள். சரி கதைக்கு வருவோம்.

இந்த Big Bang அப்படின்ன என்ன? - சற்று யோசித்து தான் ஆரம்பித்தேன். அவன் எதற்காக இதை கேட்க வருகிறான் என எனக்கு நன்றாகவே தெரிந்தது. எனினும் எந்த விவாதத்திற்குள்ளும் செல்லாமல், அணுக்களின் மோதல், கதிர்வீச்சு, புதிய அணுத்துகள், Big Bang, possible creation of universe, CERN, etcetc என விவரித்தேன்.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெறுமா என்று கேட்டார். பெறும் அதற்கான ஆயத்தங்கள் சிறப்பாகவே இருக்கிறது, மேலும் pure science'ல் வெற்றி தோல்வி என்று எதுவுமில்லை, ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்த்து ஒரு சோதனையை செய்வதில்லை என்றேன். அமைதியாகிவிட்டார்.

இன்று மழை பெய்தது காலை. முதல் கோடை மழை பெங்களூருக்கு. இன்றும் cab ஏறினேன். தாடி நண்பர் அமர்ந்திருந்தார். அந்த Big Bang சோதனை வெற்றியா என்றார். ஆம் வெற்றி தான்’ என்றேன் நான். ஆழ்ந்த அமைதியுடன் சில கணம் யோசித்தார் (ஒரு ஞானி ரேஞ்சுக்கு நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்) அப்புறம், உலகம் எப்படி படைக்கபட்டது என்பதை மனிதனால் கண்டுபிடித்து விட முடியாது என தீர்க்கமாக கூறினார்.

தாடிக்காரர்களிடம் விவாதிப்பதில்லை என்பது என் அடிப்படை முடிவு, இருந்தும் அமைதியாக கூறினேன், “இந்த உலகம் கோடான கோடி வருடங்களாக இங்கே இருக்கிறது, ஆனால் அறிவியல மிகவும் இளமையானது, சில நூறு வருடங்களாகத் தான் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதே மாதிரியான, இன்னும் மோசமான எதிர்ப்புகளை சந்தித்து, மெல்ல மெல்ல தன் முயற்சியில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்றில்லாவிட்டலும் என்றாவது ஒருநாள் மனிதன் அந்த முடிவான கணத்தை அடைவான், It'll take its own time என்று கூறி அமைதியானேன்.

சற்று நேரம் கழித்து, படைத்தவன் மகிழ்ச்சியானதால் தான் இன்று மழை பெய்தது மேலும் படைத்தவன் மகிழும் கணத்தில் பெண் குழந்தைகளை தருவான் என்றார். அந்த ஆளுடன் இவ்வளவு நேரம் பேசியதற்காக ஷீவை கழட்டி அடித்துகொள்ளலாமா என சிந்தித்தேன், மனதில் அடித்தும் கொண்டேன். இப்படி ஒரு வடிகட்டின முட்டாள் தனத்துடன் இவர்களுக்கெல்லாம் எதற்கு big bang குறித்த கவலைகள்? இந்த மடையனுக்கா நான் electron, proton, sub atomic particles என்று விவரித்து அறிவியலை கேவலப்படுத்தினேன் என நொந்துகொண்டேன். இதில் என்னை குத்தி காட்டுவது வேறு, நான் பெண்குழந்தைக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தையாகிவிட்டது. அதை குத்திகாட்டுகிறாராம்!!

இவனுங்கள நெனச்சா கண்ணு மூக்கு காது எல்லாமே கட்டுதேடா அய்யா... என்ன ஆளவிடு. இஸ்லாம் என்றால் சிந்திக்கவே கூடாது என்று சொல்லி குடுப்பாங்களோ, இல்ல தாடி வளர்த்தா மட்டும் சிந்திக்க கூடாது என்று பத்வா போட்டுடுவாங்களோ??

செவ்வாய், 30 மார்ச், 2010

கவிதையில்

தினம் ஒரு கவிதை
வாசித்து விடலாம்
அவள் வனப்பில்
எழுதாதார் எவருண்டு
தினம் ஒரு கவிதை
எழுதிவிடலாம் காலத்தில்
நிலைத்துவிடும் பேராவா
எவர்க்குமுண்டு
தினம் ஒரு கவிதையாய்
வாழும் வாழ்வென்ன வாழ்வோ
எவருக்கும் வாய்த்திடாத வரமோ

லாம் லாம் லாம்

மை நிரப்பியாகிவிட்டது
வந்துவிழும் வார்த்தைகளில்
வெளிப்பட்டுவிடலாம் ஒரு
நெம்புகோல் கவிதை
காட்சியும் பாத்திரமும்
கச்சிதம் கணப்பொழுதில்
படைப்புலகம் எனதாகலாம்
இருட்டுதான் மின்னல்
கூர்தீட்டிய முனைசிதைப்பது
ஆதியும் அறிந்திராத
விசித்திர பறவையாக
இருக்கலாம் இறக்கலாம்
உடைகளைந்து இறங்கிவிட்டேன்
இழுத்துச்செல்லும் உந்திச்சுழியின்
இழுப்புக்கெல்லாம் இழுபட்டு
இடைநுழைந்து வெறியாடலாம்
லாம் லாம் லாம்
லாங்கு லகாமின்றி
பொழப்பு ஓட லாம் லாம்
லாம் லாம் லாம்

திங்கள், 29 மார்ச், 2010

உயிர்ப்பு

தேடிவந்து தெரிவிக்கப்படும் அன்பு
ஆர்வமற்று புறக்கணிக்கப்படுகிறது
மழைநேரத்தில் கீழிறங்கும் இலையின்
கவனிப்பாரற்ற பிரிவைப்போல
புதுப்புனலின் செம்பட்டை நீரில்
அடையாளமற்று சகதியில் மக்கும்

மெல்லியவெயில் பிரதிபலித்து
உங்கள் கவனம் பறிக்கும்
பசுந்தளிரின் இளநரம்புகளில்
குதுகலங்கொண்டு பாயும்
உயிர்மையின் அடையாளங்கள்
உங்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான்
உதிர்வதெல்லாம் உயிர்த்தெழுமென்பதை
நீங்கள் அறிந்திருக்கும்வரை.

உயிர்த்தெழுதலின் சாட்சி நீங்களாகவே
இருக்கப்போவதில்லை எப்பொழுதும்
என்பதை அறிந்திருக்கும்வரையிலும்.

வியாழன், 25 மார்ச், 2010

சேர்ந்து வாழ்வதும், திருமணத்திற்கு முன் உடலுறவும் தனிமனித உரிமை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு :குஷ்புவுக்கு வெற்றி

“அதான் நைட்டெல்லாம் கட்டி வச்சி அடிச்சீங்கில்ல.. போங்கய்யா போயி புள்ளங்கள படிக்கவைங்க.. வந்துட்டாங்க பெருசா கலாச்சாரத்த காப்பாத்த”

உச்சநீதிமன்ற தீர்ப்பு செருப்பெடுத்து விளாசி இருக்கு இந்த கலாச்சார காவல் கும்பல. குஷ்பு சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழக்கூடாதுன்னு எந்த சட்டம் சொல்லுச்சு?? கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் உடலுறவு வச்சிக்கணும்னு எந்த சட்டம் சொல்லுச்சு?? வாழ்வதும், உடலுறவும் அவரவர் தனிப்பட்ட விருப்பம், அதை பாதுகாப்பது சட்டத்தின் கடமை.

குஷ்புவின் அறிக்கையால் எத்தனை பெண்கள் வீட்டை விட்டு ஓடி இருக்கிறார்கள் அல்லது தவறான வயதில் உடலுறவு கொள்கிறார்கள்?? உங்கள் வீட்டிலிருந்து எந்த பெண்ணாவது வீட்டை விட்டு ஓடி இருக்கிறதா குஷ்புவின் பேட்டிக்கு பிறகு? அப்படி இல்லையெனில் நீங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டீர்? என வருத்தெடுத்து, குஷ்பு மீதான 21 வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த செருப்படியுடன் விட்டிருக்க கூடாது, அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்,தனிப்பட்ட உடமை பாதிப்புகளுக்கும் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஊர் ஊரா சென்று மரங்களை வெட்ட வேண்டியது, போராட்டம் நடத்தி பொதுசொத்த பாழ்பண்ண வேண்டியது, சாதிக்கலவரத்த தூண்ட வேண்டியது, கொலை பண்ணவேண்டியது, மக்கள் பணத்த கொள்ளையடிக்க வேண்டியது இதெல்லாம் குற்றம் இல்ல....

எவன் எவளோட படுத்துட்டுருக்கான்னு வெளக்கு புடிக்குறத்துக்கு மட்டும் ஒரு குரூப்பாத்தான் அலையறானுங்க போல... ஆமா உங்க தொழில் தான் என்ன? அடுத்தவன் எப்ப கோவணத்த அவுக்கறான்னு பாத்துட்டு இருக்கறதா?? அதுதான் உங்க பண்பாடா? காலாவதியான சாரமா?? வேலையத்தவனுங்க.

புதன், 24 மார்ச், 2010

இராமநவமி சுண்டல்

இராமநவமி கர்நாடகாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் நேரம் என்பதால், சந்து பொந்தில் இருக்கும் கோயிலில் எல்லாம் Unofficial அன்னதானம் மற்றும் அரசியல் கட்சிகளின் போட்டி சாப்பாடு என ஒரே கொண்டாட்டம் தான். பிஜேபி’யின் ஆஸ்தான நாயகன் ராம் எனவே அவர்களின் வேண்டுதல்களும், அன்னதானமும் களை கட்டியது.

மணிக்கொரு கும்பல் வீட்டு கதவை தட்டி ஓட்டு கேட்டு, எங்களின் பெயர் பட்டியலில் இல்லை என்பதில் மிகவும் கவலையுற்று, சோகத்துடன் திரும்பியது. தரைத்தள வீட்டில் இருந்தால் இந்த இனிய தொல்லைகள் அனுதினக்காட்சிகள். (சீக்கிரம் பெயர்பட்டியலில் இணைக்க வேண்டும்: தேர்தல் சமயத்தில் 1000-2000 தேறும் :) )

சரி ராம் கதைக்கு வருவோம். Corporate Disucssion / Lunch Talks ஒரு அபாயகரமான ஏரியா. எதை தொடுவது எதை விடுவது என யோசித்து யோசித்து பேச வேண்டி இருக்கும். தின்ன உக்காரும் கூட்டத்தை பொறுத்தும் அதுமாறுபடும். முஸ்லீம் பசங்கள் வச்சிகிட்டு பாகிஸ்தான், தீவிரவாதம் என்று பேசுவது கஷ்டம். நம்மள் வச்சிகிட்டு காவிரிய பத்தி பேச பெங்களூர் பசங்களுக்கு கஷ்டம். கல்யாணமாகியிருந்தா பிகர் குறித்து பேசுறது இன்னமும் தொல்லை. இதில் போன வாரம் ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.

14 வருசம் காட்டுல சுத்துன ஜோடிக்கு ஏன் குழந்தை இல்ல? இராவணன் கிட்ட இருந்து வந்த பின்னாடி தான லவ குசா ராமாயணத்துல எண்ட்ரி, அதனால அது இராவணனோட குழந்தங்க அப்படின்னு ஒரு தரப்பு எடுத்து விட... உள்ள நுழையலாம வேணாவான்னு எனக்கு ஒரே குழப்பம்.

அதுவும் சரிதான். எல்லாம் தெரிந்த ராமனுக்கு அது தன்னோட குழந்தைங்க என்பது தெரியாதா?? அப்படி இல்லாத பட்சத்தில் தானே மனைவி மீது சந்தேகம் மற்றும் அவளை காட்டுக்கு துரத்தல்?? கடவுள் மனித அவதாரத்தில் இருந்தாலும், அடிப்படை நாள் கணக்கு கூடவா தெரியாது, அது தன் குழந்தையா இல்லையா என அறீய?? எழவெடுத்தவன் அந்த கணக்கு கூட தெரியாம என்னத்தடா ஆட்சி செஞ்சிருப்பான்?

அடுத்த கேங்: இல்லடா... அந்த ஆளபாத்தாலே ஒரு மாதிரியா இருக்கான்.. இதுல ஒரு தம்பி கூட ஓவர் கனெக்சன்... ஒருவேள அவனா நீயீ மாதிரி இருக்குமோ... அதனால தான் 14 வருஷம் பிள்ளை இல்லையோ?? - எனக்கு இது கொஞ்சம் அதிகமாகவே பட்டது. திருநங்கைகளையே அரவணைக்கும் மனப்பக்குவத்தில் இந்த முன்னெடுப்பு சரியான திசையில் செல்வதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நண்பர் விடாமல் - அந்த ஆள் அந்த மாதிரி கேசுன்னா எதுக்கு சும்மா ஒரு புள்ள வாழ்க்கையா பாழாக்கனும், அப்புறம் அவள காட்டுக்கு அனுப்பனும், இதுல சாமி காமின்னு யோக்கியத வேற எதுக்கு?? தம்பி கூடவே சந்தோசமா இருந்த்து தொலைக்க வேண்டியதுதான...

பெங்களூரில் நிலவும் multiculture, multi dimensional thought process’ல் அலசப்படாத கருத்துக்களே இல்லை எனலாம். அதில் ராமனின் டிரவுசரும் கழட்டப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது எந்த வலையிலும் பெண்மையை இழிவுபடுத்தும் பதிவல்ல. சீதா என்ற பெண் உண்மையே என்றால் அந்த பெண் சிந்தியா கண்ணீரே, இன்றளவும் ராமன் என்ற பாத்திரத்திற்கு கிடைக்கும் அனைத்து அவமரியாதைக்கும் அடிப்படை என்றே நினைக்கிறேன்.


திங்கள், 22 மார்ச், 2010

Blogs:மைய்யம் கரைந்த இலக்கியம் (Decentralized Literature)

இலக்கியம் அதற்கான குறியீடுகளை, படைப்பாளியின் பார்வை மற்றும் அனுபவங்களின் வழியே தன்னை சமைக்கிறது. இலக்கியம் தன்னைத் தானே நிகழ்த்திக்கொள்ளும் ஒரு களமாக படைப்பாளி உதவுகிறான். அந்த களத்தின் பண்புகள், விருப்பு வெறுப்பு, தீர்ப்பு, அறியாமை அனைத்தும் இலக்கியத்தின் கூறுகளாகி வாசிப்பவனின் எண்ணஓட்டத்திற்கேற்ப தன் பாதிப்பை நிகழ்த்திச்செல்கிறது. உணரப்படும் இலக்கியம், எடுத்தாளப்பட்டு, வடிவமாய் சமைவதில் படைப்பாளியே அதன் முதல் பார்வையாளனுமாகிறான்.

படைப்பாளியின் ego படைப்பின் வழி தெளிவாக அல்லது திட்டமிட்டு இறக்கிவைக்கப்பட்டு, இலக்கிய புனிதபிம்பங்கள் அரசியற்தந்திரத்திடனும் பிரச்சார சுற்றுக்கு விடப்படுகிறது. இலக்கிய ஆளுமை மற்றும் அவ்வாளுமையின் படைப்பு இரண்டும் மெல்ல மெல்ல தனக்கான மைய்யத்தை நிறுவிவிடுகிறது. பிம்பக் கட்டுடைப்புகள், அந்த மைய்யத்தை குறிவைத்தே தன் ஆயுதங்களை எறிகிறது.

Critics shatter the axis-the ego. படைப்பின் egoவை தூளாக்குவதன் மூலம் படைப்பாளியை நிர்மூலமாக்குகிறது எதிர் வாதங்கள். எப்பொழுதும் இவை சாத்தியமாகிவிடுவதில்லை. எதிர்ப்புகளை சீரணித்து, அல்லது அதையே தன் egoவை வளர்க்கும் செறிவூட்டப்பட்ட உணவாக மாற்றி மேலும் மேலும் படைப்பாளுமை தன் மைய்யத்தை, அதன் அடர்த்தியை அதிகரிப்பதும் நிகழ்கிறது. படைப்பும், ஆளுமையும், பின் தொடர்பவர்களும் அந்த மைய்யத்தை நிறுவிட்ட போதையிலையே இறுமாப்படைகின்றனர். இதுநாள் வரை இதுவே இலக்கிய பெருமையின், படைப்பாளுமையின் பரிசாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால், பதிவுலகின் வருகைக்குபின், இலக்கியவெளிப்பாட்டிற்கான தளம் வேறாகிவிட்டது. இது மைய்யம் கரைந்த படைப்புவெளி. Decentralized Platform. ஒரு மாயச்சூழல் அல்லது வெவ்வெறு ஆரங்களில் சுழலும் முடிவற்ற சுருள்பாதை. இதோ, அதோ என்று எந்த படைப்பாளுமையின் நிழலிலும் ஓய்வெடுத்து, போற்றி புகழ்ந்து, மைய்யத்தின் அடர்த்தியில் பிரச்சார துண்டு சீட்டுகளை விற்பனைக்கு விடுவது இயலாத ஒரு செயலாகிவிடுகிறது. வெவ்வெறு இசம் அல்லது பரிமாணம் என்ற அளவில் திரிந்து நின்ற இலக்கியம் இன்று தளவேறுபாட்டின் சூழலில், தன் ஆளுமையை முழுமையாக நிர்மாணிக்க, அல்லது குவித்து வைக்க இயலாததாய் துணுக்குற்றுக்கிடக்கிறது.

பிரதான ஆளுமை என மார்தட்டிய மைய்யங்கள், நாளொன்றாய் கிளம்பும் வெவ்வெறு படைபாளுமைகளின் நெருக்குதலில் மிகவும் நிர்வாணமாய் பாதுகாப்பின்றி உணர்கின்றது. தன் சார்பு தளங்களை அல்லது தத்துவ தேடல்களை முன்வைப்பதில் பெரும் பின்னடைவை சந்திக்கிறது. ஏனெனில் அனைத்து சார்பு தளங்கள், தத்துவங்கள் ஏதாவது ஒரு புள்ளியில் தோலுரிக்கப்பட்டு பரிகசிக்கபப்டுகிறது, ஆளுமையின் மைய்ய அடர்த்தி மறுபடி தாக்குதலுக்குள்ளாகி, புறமுதுகிட்ட பேரரசன் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.

தகவல், அனுபவம், தேடல், சார்பு, தத்துவம், மொழி, கதை, படைப்பு, படைப்பாளி, பார்வையாளன் என அனைவரும் இயங்குதள நிலையாமையின் வெப்பத்தை உணரத்துவங்கிவிட்டனர். புதுமைப்பித்தனோ, குபரா’வொ, கரிச்சான்குஞ்சோ, நாபி’யோ இறூமாந்து திரிந்த படைப்பு தளங்களும், கால அளவுகளு இனி வரும் படைப்பாளுமைகளுக்கு எட்டாக்கனியே. பதிவுலம் அந்த மைய்யமற்ற வெளியின் நீள அகலங்களை நாளுக்கு நாள் புரட்டிப்போட்டபடியே தன்னையும் சுய அழிவிற்கு உட்படுத்துகிறது.

Decentralized இலக்கியம், முகமற்ற படைப்பாளுமைகளின் மைய்யமற்ற தளங்களில் உருக்கொண்டு, முழுக்க முழுக்க இலக்கியம் இலக்கியத்திற்கான, நினைவின் அடுக்குகளில் தெளிவற்ற அனுபவங்களை அடுக்கிச்செல்லும் நிகழ்வாகவே அமையும். புனிதபிம்பங்கள், நெம்புகோல் படைப்புகள், தீவிர ஆளுமை, தவிர்க்க முடியா ஆளுமைகள் என்ற முத்திரைகள் விற்கப்படும் கடைகள் மூட்டையை கட்டவேண்டியதும் காலத்தின் நியதியாகிவிடும் - விட்டது.

இந்தச்சூழலில் தீவிர மனோபாவத்துடன் அல்லது ஆழ்ந்து அனுபவித்து முன்வைக்கப்படும் படைப்புகள் விரல்விட்டு என்னக்கூடியவையாக அல்லது எண்ணிறைந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது. A Polarized creative world. போலச்செய்தல் அல்லது பாவித்தல் வெகுவிரைவாக -நொடிகளில் நிகழ்வாய்ப்பிருப்பதால், எங்கும் ஒரே மாதிரியான அனுபவங்களை அல்லது முடிவான படைப்புகளை கண்ணுறும் கடுப்பான ஒரு நிலைக்கு வாசகர்களை தள்ளுவதும் Decentralized Literature'ன் பண்பாக இருக்கும்.

ஆளுமைகளின் Underwearகளை துவைத்து காயப்போட ஆயிரக்கணக்கில் வலைப்பக்கங்கள் இருக்கும். சுனாவுடன் ஜி-சாட்டில் கதைத்த பொழுதொன்றில் முதல், எனது முதல் மின்னஞ்சல் வரை ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை பகிரப்படுவதில், நீங்களும் ஒரு வாசகன் - நீங்களும் ஒரு ஆளுமை - நீங்களும் ஓரிடத்தில தூற்றப்பட்டு மற்றொரு பக்கத்தில் புகழப்பட்டு - ஒரு சில ஆளுமைகளே குப்பை கொட்டி, குசுவிட்டுத் திரிந்த படைப்புவெளி இனி அனைத்து வலைஞர்களுக்கும் கிட்டும். இந்த நொடியில் இந்தப் பதிவை கிழித்து தோரணம் கட்ட முடிவெடித்துக்கொண்டிருக்கும் உங்கள் குரூரபுன்னகைக்கு ஒரு வணக்கம். Bro, Welcome to the Blog literature - The Decentralized Zone!

புதன், 3 மார்ச், 2010

ஆதியில் வீடியோக்கள் இல்லை (அ) என்ன கொடும நித்தியானந்தம் இது??!!

சாமிகளின் காமலீலை குறித்து எழுதப்புகுந்தால் என் டிரவுசர் நனைந்துவிடும் எனவே அதை தி.க. வெளியீடுகளை படித்து அறிந்து கொள்ளுங்கள். உலக மதங்களிலே அதிகபட்ச Porno Contentஜ உள்ளடக்கியது பொந்து மதம் தான். தொட்டதுக்கெல்லாம் தூக்கிட்டு நிக்குற சனங்க அதை அனுபவித்து அனுபவித்து எழுதி, சிலையில் வடித்து, காமசூத்திரம், கொக்கோகம் என இன்னிய வரைக்கும் non stop innings நடந்து கொண்டிருக்கும் நாட்டில் ஒரு தனி மனிதன் தன் உடல் தேவையை தனித்துக்கொள்வது எவ்விதம் தவறு?? இந்திரன் செய்யாததா?? கிருஷ்ணன் செய்யாததா? ரதி-மன்மதன் என தனி இலாகாவே இருக்கிறதே சாமி... நித்தியானந்தா மட்டும் என்ன செய்யமுடியும்??

ஆதிகாலத்தில் விடியோ கேமராக்கள் இல்லை. இல்லையென்றால் இன்று சாமியார்கள் என்ற கான்செப்டே இருந்திருக்காது என நினைக்கிறேன்.. கோயிலில் கோவனத்தை அவுத்த சாமியாரை ஒப்பிட்டால் நித்தியானந்தம் எவ்வளவோ பரவால்ல!

(தேவநாதன்: நம்ம ரேஞ்சிக்கு ரஞ்சிதா செட்டாகுமா... ஏதோ கோயிலுக்கு வந்து போற ஆண்டிகள மட்டும் தான் மடக்க முடிஞ்சது! நித்தி... கோயில் தான் safe.. இங்க வீடியோ கேமரால்லாம் இருக்கது.. என்ன பொழக்க தெரியாத புள்ளயா இருக்க போ!!! சொல்லிருந்தா காஞ்சிபுர குறுக்கு சந்து கோயில்ல ஒன்ன செட்பண்ணி தந்திருப்பேனே...தம்பி நாம பூணூல் கேட்டகிரி... அதனால damage அவ்வளவாக இருக்காது..)

(காஞ்சி சங்கரா...: அந்த பிகர் நமக்கு மடங்காம போச்சே :( ... இளைய மடத்துகிட்ட சொல்லி profile update பண்ண சொல்லனும்... ஒன்னும் பண்ண முடியலன்னாலும் பாத்தவது பசிதீத்துக்கலாம்மோன்னோ)

இந்திய அல்லது தமிழ் hypocrisy என்பது இதுதான்... நீங்க மட்டும் குஜாலா இருக்கலாம்.. உங்க கஷ்டம் கவல துன்பத்த போக்குற சாமியார்க்ள் மட்டும் எல்லாத்தையும் கையில் புடிச்சிக்கிட்டு அமைதியா இருக்கனும்??? என்ன கொடும நித்தியானந்தம் இது?? அவன் அப்படியே control பண்ணிட்டாலும் NightFall இருக்குமேடா.. அதுக்கு என்ன பண்ண போறீங்க?? அவனுக்கு வரக்கூடாதுங்குறது உங்க பிரச்சனையா அல்லது ஒரு நடிகையை அ பெண்னை கூடிவரக்கூடாதுங்கறது உங்க பிரச்சனையா?? அவன் rest room'ல் தன்கையே தனக்கு உதவி என ஒக்காந்துட்டா உங்களுக்கு எதும் பிரச்சனை இல்லையா??

மதம் தனிமனித உரிமை என்றால் காமமும் தனிமனித உரிமை தான். வியாபாரமாகவில்லை: மோசடி இல்லை: ர நடிகை நித்தி மீது காதலாய் கசிந்துருகி கண்ணீர் மல்கி இருக்கலாம்... அதுவும் அவர் தனிப்பட்ட உரிமையே. என்னவோ இவனுங்க உசுரே போறமாதிரில்லா சீன போடுறாங்க எல்லாம்??

நித்தியானந்தம் ஒரு போலி! சாமி-சாமியார் என்பதே ஒரு போலிதான். போலச்செய்தல் தான் கடவுள் என்ற concept. இதில் என்ன உண்மையை எதிர்பார்க்கிறார்கள்?? அவன் வசூல் செஞ்ச பணத்துக்கு உங்களுக்கு எதும் நல்லது நடக்கலன்னா அதுக்கு நீங்கள் கேள்வி கேக்கலாம்.. அது பிசினஸ் தர்மம். அவன் கோவணத்த அவுத்ததுக்கெல்லாம் இப்படி கொடிபிடிக்கிறீங்களேடா... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா??

கேரளா தண்ணி தரல, அரசியல் வாதி 1000 கோடியா ஏப்பம் விட்டுகிட்டு இருக்கான், bt brinjal உள்ள வர பேரம் நடக்குது, ஓட்டுக்கு 1000 ரூபா வாங்கிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்க்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் தன் இயற்கை தேடலை எறக்கி வைக்க பார்த்த போராட்டம், கொடி, கண்டனம் - சீ பொழப்பத்த பசங்களா..

வியாழன், 21 ஜனவரி, 2010

1000த்தில் ஒருவன் - ஈழவீழ்ச்சிக்கு பின்னான மிகமுக்கியமான படைப்பு

ஈழத்துயரத்தை கூவிவிற்று காசாக்குவதாக ஆஓ’வின் மீது எழும் குற்றச்சாட்டுகளை அது எழும்பும் பின்புலம் சார்ந்தே எதிர்கொள்ள வேண்டும். வரலாறு முழுவதும் வன்கொடுமையிலும், அதிகார வர்க்க ஒடுக்குமுறை, பேரினவாத, முதலாலித்துவ, கம்யூனிச என அனைத்து கோட்பாடுகளின் அடக்குமுறைகளாலும் வாழ்வை, எதிர்காலத்தை, இன இருப்பை தொலைத்த மக்கள் கூட்டம், தத்தம் கலை, மொழி, படைப்புகளின் வழியே அந்த வலியை, ஓலத்தை கைமாற்றி தந்தபடியே இருக்கிறது.

ஆன்மையற்ற தமிழினம் மட்டுமே சிறு குற்ற உணர்ச்சியுமின்றி, அதிகார போதைக்கு ஈழ உதிரத்தை ஊறுகாயாக தொட்டுக்கொண்டு, தொலைகாட்சியில் மானட- மாராட, டீலா பூலா என விசனப்பட்டு, மகிழ்வுடன் வாழ்வை கழிக்கிறது. தொடர்ந்து ஒடுக்கப்பட்ட இனத்தின் வரலாற்று உணர்ச்சியை மழுங்கடித்த வேலையை ஆரிய, களப்பிர, தெலுங்கு அரசுகள் செவ்வனே செய்து வந்ததின் பலன், இன்று அது தமிழனின் அடையாளமாகவே ஆகிவிட்டது.

வேர்களை காக்கும் கலை இலக்கிய துறைகள் இதுவரை விதையற்ற நாயின் முயத்தல் கனவுகள் போலவே கையாலாகாத படைப்புகளாக வாந்தி எடுத்து வைத்திருக்கிறது. அதிகார துதிபாடிகள், அடிமை படைப்பாளிகள், சனாதான சாம்புகள்- இதில் இன அடையாளத்தை எங்கே தேடுவது. கல்தோன்றி கதைகள் உண்மைதான் போலும், மக்களை விலங்குகளாக மாற்றியதில் அதிகார, ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு அளப்பரியா வெற்றி.

ஏழு தடைகள் என்பது நம்மினத்தை ஒடுக்கிய சிங்களர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எனலாம். காவலை உடைத்து, மக்களை கொன்று, உறவாடி கொடுத்து, (நடராசனின் நிழலில் பாயும் புல்லுருவிக்கூட்டம் நமக்கு உணர்த்துவது தில்லையின் தற்போதைய பெயர்-நடராசர் ஆடுவது-சிதம்பரம்!!.. புள்ளிகளை இணைக்கவும்).

இந்த வலிகள் அனுதினம் நம் இருத்தலின் சுயமாக மாறிவிட்ட வேளையில், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், கவனிக்கத்தக்க வரலாற்று ஆவணமாக, அடக்குமுறை அரசாங்க சூழலில்- தமிழனின் வீழ்ச்சியை பூடகமாக பதிந்து, நம் துயங்களுக்கான தூரிகையை வீச்சுடன் நிரப்பி, வலிகொள்ளச் செய்திருக்கிறார்.

ஆஸ்கார் புடுங்கிகள், தமிழகத்தை வாழவைக்க வந்த வள்ளல்கள், வருங்கால முதல்வர்கள், கங்கை அகோரிகள் வந்து காப்பற்றும் தமிழ் அபலை என நாறிக்கிடக்கும், ஈழத்துயரத்தை படமெடுக்க தாகமிருக்கிறது, தைரியமில்லை என குழப்பமாய் பேசித்திரியும் அவதாரங்களின் நடுவில், செல்வராகவன் உண்மையிலே ஆண்மகன் தான்.

சோழன், பாண்டியன் என்பது இங்கு குறியீடுகளே. குறியீடுகள் கொண்டு உண்மை பதிக்கப்படும், இங்கு உண்மைகளை கொண்டு குறியீடுகள் மறைமுகமாக உயிர்கொள்கிறது. சிங்கள்-பாண்டிய-கேரள கூட்டணி சோழத்திற்கு எதிராக திரண்டெழுந்த சான்றுகள் சோழவரலாறு முழுக்க வழிகிறது. பாண்டியர்கள் என்பது இங்கு சிங்களர்களுக்கான பதிலீடு. சோழம் என்பது தமிழர்களுக்கான குறியீடு. வில்லும், அம்பும், வீரமும் பீரங்கியின் முன்னே, குண்டுகளின் முன்னே, கருவறுத்தலின் முன்னே, துரோகத்தின் முன்னே, புல்லுருவிகளின் முன்னே என்ன செய்ய முடியும்?

கருணாக்கள் பெண்வடிவில் வந்திருப்பது இரட்டைக்குறியீடு. நீங்கள் கருணாவாய் இருந்து அதிகார துணையுடன் ஒடுக்கி, ஆனந்திக்கலாம் அல்லது சோழ தலைவனாய், உங்கள் மனைவியை நிர்வாணமாய் ஆடவிட்டு, கையறு நிலையில் உயிர்விடலாம். விரிந்த கால்களின் வழியே உயிர்பிரிந்த உங்கள் சகோதரிகளின் நிலைகுத்திய விழிகளின் வலியைச்சுமந்து நடைபிணமாய் வாழ்க்கையை கழிக்கலாம்.

ஆயிரத்தில் ஒருவன் குழம்பி, குழப்பி, திசையற்ற இருளில் பயணித்தாலும், அடிநாதமாய் அதுசுமந்து மடியும் சோகம், நம் இனத்தின் வீழ்ச்சியே. அதை துணிந்து படமாக்கியதற்காக செல்வராகவனுக்கு நமது வணக்கங்கள். உறவாடி குடிகெடுக்கும் உதவாக்கரைகளை, துரோகத்தின் கால்களை, அடக்குமுறையின், பேரினவாதத்தின் கொடுமையை வெளிப்படையாக பதிந்ததற்காக செல்வராகவன், தமிழக படைப்புலகில் என்றென்றும் மதிக்கப்படுவார்.

ஈழத்து வலிகளை, வதைகளை வார்க்கும் முயற்சியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த படைப்பை பல இடங்களில் மாற்றி, வளைத்து நம் இனத்தின் கண்ணீரை வீரமுடன் பதித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். வில்லும், அம்பும், வீரமும், காதலும், பண்பாடும், மொழியும் தோற்கும் - ஒடுக்குமுறையும், துரோகமும் வெற்றிபெரும் என்பதே உண்மை.


ஆயிரத்தில் ஒருவன்- வீழ்ந்தவர்களின் கதை, வாழ்பவர்களுக்கு பாடம். செல்வராகவன் மற்றும் குழுவினருக்கு பெருவணக்கம். இழவு வீட்டில் குறைகண்டு என்ன செய்ய? இது மரணத்தின் ஓலம். இயலாமையின் வலி. இரண்டாம் பாகமெடுத்தால், நாம் வாழ்ந்த கதையை சொல்லுங்கள். யுகாந்திரங்களுக்கான வாழ்வை 30தே ஆண்டுகளில் வாழ்ந்து, எதிர்காலத்திற்கான வித்தாய் மடிந்த கருங்கூட்டம், கரும்புலி, உதிரம் சுரக்கும் முலை என்றும் நம் நினைவுகளில் இருந்து அழியாது. அவர்கள் காட்டிச் சென்ற வழியும் அழியாது.

தமிழகம் தமிழர்களுக்கானதல்ல, போய்வாரும் ஏந்தலே. போய்வாரும் ஏந்தலே. போய்வாரும் ஏந்தலே. போய்வாரும் ஏந்தலே.

வலைப்பதிவு காப்பகம்