வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மழைமோகம்

நீ புன்னகைத்த நொடி
மலர்ந்த பூக்கள்
உதிர்வதேயில்லை
சிலிர்த்து நகைத்தது
தோட்டத்து பூச்செடி
வானம் பார்த்தேன்
கொத்துக் கொத்தாய்
மினுமினுத்தன
நம்முத்தங்கள்

நுதல் தீண்டி
இதழ்நனைத்து
மலைஇழிந்து
இடைபரவி
உனைஅடையும்
இம்மழை
மோகத்தாலானது

கனவில் அணைத்ததாய்
சொல்லிச்சொல்லி
வெட்கப்பட்டாய்
அதன்பின் நடந்ததை
சொல்லவே முடியாமல்
வெட்கம் கசிந்தேன்

திங்கள், 13 செப்டம்பர், 2010

நிகழின் மணல்

முடிவிலாக் கனவின்
முடிச்சவிழும் இளகிய
பொழுதொன்றின் குரல்வளை
நெறித்தாய் கனவின்
உதிரத்துளி நினைவின்
வாசமெங்கும் வலியரற்றி

பிரிவின் பெரும்புனல்
நனைக்கும் கரையெங்கும்
நினைவின் ஈரம்
நிகழின் மணல்வெளி
வெறித்த ஒற்றைமேகம்
ஒப்பாரியில் கரைபுணரும்
அலையறியா ஆழ்கடலில்
ஆதியின் மெல்லிருள்


கால் மாற்றி
கால் மாற்றி
நீ ஆடும்
நடனத்தின்
தாளம் நான்
மிதிபடும் இதயத்தின்
பாடல் ஒலிக்கும்
தூரத்து மழைவனத்தில்
தகதிமி என மலரும்
பூக்களின் வாசம்
பௌர்ணமி இரவில்
பாடலாய் உருக்கொள்ளும்
இரகசியம் சலசலத்து
மருண்டது ஓடை.

வியாழன், 9 செப்டம்பர், 2010

பனிமுத்தம்

இரவின் பகல்
மெழுகாய் உருகும்
முழுநிலாப் பொழுதில்
தேவதைகள் தவறவிட்ட
வெண்முத்தின் ஒளிச்சிதறல்
எனக்கான உன்மோகநகைப்பில்

நதிக்கரை நாணல்
தீண்டிமீளும் வாடைக்காற்றின்
வாசம்கொண்டவள் நீ
உனக்காய் கரையும்
என்பொழுதுகளை நிறைப்பது
அலைநுரையின் மென்மைபழகும்
அதரங்களின் வண்ணம்


டிசம்பர்மாதப் பூவில்தேங்கிய
தேனின் சுவைகொண்டதுன்
முத்தமென்றேன் இல்லையென
இடம்வலமாய் அசைந்தகுழலால்
கார்காலத் துளிதானென்றேன்
சட்டென நீநிகழ்த்திய முத்தத்தில்
பட்டென விளங்கியது
முன்பனிக்காலத்தின்
மென்பனியாலனது
உன்முத்தச்சுவை