திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீர் வளையம்

நீர்ப்பிரி அலையும் வெளி
கிழித்து குடைவிரிக்கிறாய்
நீமிதித்ததில் தரையெங்கும்
நீர்வளையம்
நீர்நீராய்
வ்ளைவளையாய்

சுவர்தொட்டு திரும்பி
உனைகாணாமல்
வான்நோக்கி வெறித்திருந்தன
நீர்வளையாய்
நீண்டவழி

கரைந்த மேகம்
விரைந்து வழியும்
உன்குடை நுனிகளில்
மழைக்கண்ணீர்
தீண்டாமை ஒரு
மழைத்தன்மையற்ற
செயல்

நீர்வளையம் துளைத்த
மழைக்கண்ணீர் சபித்தது
வெளியெங்கும் கருமழை
பிரளயம் இடிமின்னல்

புதன், 25 ஆகஸ்ட், 2010

மழைநேரப் பெருங்காதல்

நீ ஈரம்துவட்டும்
மழையின் நிறம்கொண்டது
மோகம்

உன் புருவம்வழியும்
துளியின் சுவைகொண்டது
தாகம்

உன் இமைகள்மறைக்கும்
வெளியின் ஒளிபூசியது
காமம்

நீர் முத்துவிளையும்
கார்கூந்தல் கடல்மூழ்க
காதல் சுவாசிக்கிறேன்

காதலின் பெருமழைக்காலம்
நீ
நீ
மழைநேரப் பெருங்காதல்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இச்சைபிதற்றி

மழைநீர் நடமிடும்
உன்மேனியெங்கும்
செம்மல்லியின் வாசம்

அபிநயிக்கும் உன்விரல்களில்
அத்தனை பறவைகளும்
ஒளிந்திருப்பதாய் சொன்னேன்
தேடிப்பிடித்து நீயே
எடுத்துச்செல் என்றாய்
சுண்டுவிரல் தேன்சிட்டு
மோதிரவிரல் மணிப்புறா
நடுவிரல் வெண்மயில்
சுட்டுவிரல் பச்சைக்கிளி
கட்டைவிரல் கருங்குயில்
நொடிக்கொரு கிளைமாறி
கானகமாய் விகசித்த
விரல்பறவைகளின் ஒற்றைக்குரலில்
வலைமறந்த வேடன்நான்
சொடுக்கெடுத்த நேரத்தில்
இச்சைப்பிதற்றியது பச்சைக்கிளி.


காற்றுடைத்த காட்டுமல்லி
வாசம்கரைந்த ஓடைக்கரையில்
துள்ளிதுள்ளி சேறாடியது
ஒத்தக்கெளுத்தி
நீராய் கழிந்தபொழுதின்
வாசமாய் எரிந்தன
நம் அந்திமாலை
பரிதவிப்புகள்.