திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இச்சைபிதற்றி

மழைநீர் நடமிடும்
உன்மேனியெங்கும்
செம்மல்லியின் வாசம்

அபிநயிக்கும் உன்விரல்களில்
அத்தனை பறவைகளும்
ஒளிந்திருப்பதாய் சொன்னேன்
தேடிப்பிடித்து நீயே
எடுத்துச்செல் என்றாய்
சுண்டுவிரல் தேன்சிட்டு
மோதிரவிரல் மணிப்புறா
நடுவிரல் வெண்மயில்
சுட்டுவிரல் பச்சைக்கிளி
கட்டைவிரல் கருங்குயில்
நொடிக்கொரு கிளைமாறி
கானகமாய் விகசித்த
விரல்பறவைகளின் ஒற்றைக்குரலில்
வலைமறந்த வேடன்நான்
சொடுக்கெடுத்த நேரத்தில்
இச்சைப்பிதற்றியது பச்சைக்கிளி.


காற்றுடைத்த காட்டுமல்லி
வாசம்கரைந்த ஓடைக்கரையில்
துள்ளிதுள்ளி சேறாடியது
ஒத்தக்கெளுத்தி
நீராய் கழிந்தபொழுதின்
வாசமாய் எரிந்தன
நம் அந்திமாலை
பரிதவிப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக