வெள்ளி, 24 ஜூலை, 2009

ராசேந்திர சோழரின் சிலை கர்நாடகாவில்

சோழவளநாட்டின் மீதான தீராக்காதல் நாடந்தாய் வாழி காவேரி என சங்ககாலம் முதல் கவிஞர்களின், அரசர்களின் கனவுத்ததேசமாய் சிறப்புற்ற தேசம். அணைகளின்றி கரைபுரண்ட அகண்ட காவிரியை இப்பொழுது நினைத்தாலும் மனம் சிறகுமுளைத்த தும்பியாய் அந்தப்புனலில் நீராடி மகிழ்வுறும். காவிரிக்கரை தந்த இலக்கியமும், ஆட்சிமுறைகளும் வீரமும் வரலாற்றின் பக்கங்களில் தனிக்கவனத்தை பெற்று நிகரில்சோழம் என்பதை உறுதிசெய்வது.

காவிரி தோன்றிய காலந்தொட்டே சோழர்கள் அதன்மீது தனிக்காதல் கொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். கரிகாலன் - கல்லணை- காவிரி இன்றும் ஓர் தீராக்காதல் கதை. அந்தச்சோழ வரிசையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெரும்புக
ழ் கொண்ட ஓர் அரசன் உதித்தானென்றால் அது ராசேந்திர சோழன் மட்டுமே. கடல்கடந்து தேசங்களை தன் காவிரிதேசத்துடன் இணைத்த இணையில் சோழ அரசன் அவர்.

கங்கையை கொண்டுவந்து சோழபுரத்தில் அமர்த்தி, கங்கைகொண்ட சோழபுரத்தை படைத்தவன். தன் தந்தைக்கு தஞ்சை என்றால், தன் பெயர் சொல்ல ஒரு நாட்டை உருவாக்கி அங்கிருந்து அடுத்த 200 ஆண்டுகள் சோழ பரம்பரை ஆட்சி புரிய அடித்தளம் இட்டவன் இராசேந்திரன். தமிழக அலெக்சாந்தர் என்றால் அவன் மட்டுமே. அலெக்சாந்தரும் கடல் கடந்து போர் புரிந்தது இல்லை. பகை அஞ்சும் தகை சால்பு ஒன்றே அரசனின் தனிச்சொத்து, அதன் முழு உருவம் ராசேந்திரன்.

தெற்கு என அந்நாளில் அறியப்பட்ட ஒட்டுமொத்த நிலப்
பரப்பும் ராசேந்திரனின் கீர்த்தியை பாடி நின்றது. கங்கைகொண்ட சோழபுரத்து கோவில் எனும் அழகிய கலைப்பொக்கிசத்தை நமக்கு விட்டுச்சென்ற கலைரசிகன். அந்தகைய தகைசான்ற தமிழனின் சிலை, இன்றைய கர்நாடக கோலாரில் இருக்கிறது என்ற செய்தியை கேட்டபின்பு நிலைகொள்ளவில்லை எனக்கு. உடனே வண்டியை கிளப்பிவிட்டோம் கோலாரை நோக்கி.

பெங்களூரில் இருந்து 70 கீமி, பழைய சென்னை ரோட்டில் அமைந்து இருக்கிறது கோலார். தங்கத்துக்கு பெயர்போன கோலார் தான். ஊர்க்கோடியில் கோலாரம்மா கோயில் அரசு தொல்பொருள் துறை வசம் உள்ளது. கோயிலை பார்த்த உடன் ஒரு குதூகலம் எங்களை சூழ்ந்து கொண்டது, ஏனெனில் அது ஒரு சோழக்கோயில். சோழர்களின் கையெழுத்து படைப்பான “மொட்டை கோபுரம்” நம்மை வரவேற்கிறது
.

நுழைவாயில் பெருந்தூணை பிற்கால கிருஷ்ணதேவராயன் அலங்கார வேலைப்பாடுகள் செய்து சிறப்பித்துள்ளார். அதில் அவரின் சிலை ஒன்றும் இருக்கி
றது. மொட்டை கோபுரம் தாண்டியதும் கொடிமரம் அப்புறம் பலிபீடம். அதன் பின்பு சிறு தூண் கொண்டு நிறுவப்பட்ட மண்டபம் அல்லது திண்ணை போன்ற அமர்விடம். அந்த தூணில் சேனாவதி சோழசோழ சோழியவரையன் என்று எழுதப்பட்டு இருக்கிறது.

உள்ளே நுழைந்தால் இரண்டு கருவறை- ஒன்று கிழக்கு நோக்கி ஒன்று வடக்கி நோக்கி. கோவில்ன் சுவர்களெங்கும் அங்கிங்கெனாதபடி கல்வெட்டுகள். கருவரையின் பின்புற சுவற்றில் இருந்து கல்வெட்டு ஆரம்பிக்கிறது “ திருமன்னி வளர இருநிலமடந்தையும் போர்செயப்பாவையும்” என மிகப்புகழ்பெற்ற ராஜேந்திரரின் மெய்கீர்த்தி ஆரம்பிக்கிறது.

கருவறைக்குள் நுழைய பக்திமான் போல நடிக்க வேண்டியதாயிற்று. :). உள்நுழைந்ததால் கிடைத்த மற்றொரு பரிசு, கருவறக்கு நேரெதிரே ஒரு தூணில் ராசேந்திரரின் மெய்கீர்த்தி. 70 வரிகள் கொண்ட ராசேந்திரரின் மெய்கீர்த்தியில் முழுதும் இடம்பெற்றீருப்பது முழுவதும் அவர் வெற்றிகொண்ட நாடுகளே எனில் அந்த பேரரசனின் தீரம் எத்தகையதாக இருந்திருக்கும்?

இனி புகைப்பட ஆவணம்.



ராசேந்திரனின் போர்க்கோலக்காட்சி அவரின் தீரத்தை வீரத்தை கல்லில் வடித்து காலத்தில் சமைத்துவிட்டது. ராசேந்திரனின் சிலையை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ராசேந்திரரின் ஆட்சிக்காலத்தில் பிடரி என்றழைக்கப்பட்ட கோலாரம்மா கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் குறித்த கல்வெட்டு கோயில் முழுவதும் வரிகளாய் வழிகிறது.

பெங்களூரில் இருக்கும் ஆர்வலர்கள் சென்று கண்டு களிக்கலாம். மிகவும் குறைவான தூரம்-2மணி நேரத்தில் கோலாரை அடைந்து விடலாம். சாலையும் நன்றாக இருக்கிறது. ராசேந்திரனின் மெய்கீர்த்தி சொல்வது போல் போர்செயச் செல்வி அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு துணை இருந்ததால், தோல்வியை கண்டறியா உலக போர்ப்படை தலைவர்களின் வரிசையில் ராசேந்திரரின் பெயரும் இடம் பெற்றிருப்பது ஒரு சிறப்புச்செய்தி.

1 கருத்து:

Vijayashankar சொன்னது…

Please give the route map. Or atleast from a fixed point in Bangalore. Say Silk Board.

கருத்துரையிடுக