வெள்ளி, 24 ஜூலை, 2009

ஐந்திணை ஐம்பது - நூலனுபவம்

வாசித்தல் அவரவர் விருப்பம் சார்ந்தது. தேடித்தேடி வகைவகையாய் படிப்பது நம் நுட்பத்தை வளர்தெடுக்க வழி செய்கிறது. எடுத்ததெற்கெல்லாம் ஆங்கில நூற்களை மேற்கோள் காட்டும் நம் அன்பர்கள், தமிழின் தொன்மையான இலக்கிய சுரங்கத்தின் பெருமையை அறியாதவர்களாகவே இருப்பது வேதனையளிக்கும் உண்மை. பழந்தமிழ் இலக்கியங்களை படித்து மகிழ பெரும் புலமை தேவையென பலரும் நினைத்துக்கொண்டிருப்பதே அதற்கான அடிப்படை என நினைக்கிறேன்.

ஒரு புதிரை அதற்கான நேரமெடுத்து ஆராய்ந்து விடுவிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியே பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் பொருந்தும். இலக்கியங்கள் அதற்கான நிலபரப்பு(திணை), மக்கள், துணைக்கூறுகள் என மிகவும் கவனமாக வடிக்கப்பட்ட சித்திரங்கள். பக்தி இலக்கியத்திற்கு முற்பட்ட சங்கபடைப்புகள் அனைத்தும் இந்த திணைபகுப்பின் கீழ்வரும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய மொழியில் சொல்வதென்றால், கோயம்புத்தூர் குசும்பு, திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லி, காஞ்சி பட்டு என நாம் வகைபடுத்துவது போல.

திணைக்குரிய மக்கள் புரியும் தொழில், நிலப்பரப்பு, வணங்கும் தெய்வம், பறவைகள் முக்கிய உறுப்புகளாக கொண்டு கட்டமைக்கப்படும் சங்க இலக்கியமே இன்று வரையிலான நம் இலக்கிய முன்னெடுப்புகளுக்கான பின்புலம். இந்த அடிப்படை கொண்டு மதுரை திட்டத்தில் (http://pm.tamil.net/akaram_uni.html) மின்பதிப்பாக்கப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை வாசித்து களிப்புறலாம். வார்த்தைகள் புரியாத பட்சத்தில் Dravidian Etymology Dictionary'யின் துணையை நாடலாம். தமிழ் செறிவான மொழி என்பதால், ஒரு வார்த்தை பல அர்த்தம் காட்டும், சூழலுக்கேற்ப பொருத்தி அர்த்தம் காண வேண்டும்.

எல்லாமே வெறுத்துப்போகும் ஒரு சூழலில் நான் பழந்தமிழ் சுவடிகளை புரட்டுவது உண்டு. என்காதல் பெரும்பாலும் சங்கநூல்களே-அகம்,புறம், பதினென்கீழ்கணக்கு நூல்கள் மற்றும் சிலம்பு. விளக்கம்றிய இயலா சூழலிலும் அதை வாசித்துக்கொண்டிருப்பதே நமை பழந்தமிழ் பூவனத்திற்கு இட்டுச்செல்லும். காதலும், வீரமும், விருந்தோம்பல் பண்பாடும், இன்றைய சூழலுக்கு பல மடங்கு மேம்பட்ட நற்கொள்கைகளும் கொண்ட ஒரு Ideal குமுகாயத்தை, இனக்குழுவை அறிந்து வையக்கலாம்.

சங்கநூல்களுக்கு பெரும்பாலும் நான் நூலறிமுகம் செய்வதில்லை. என்னறிவே அரைகுறை இதை மன்றத்தில் வைக்கும் துணிபு இல்லை இது நாள் வரை. என்றாவது ஒரு நாள் ஆரம்பிக்கவேண்டிய ஒன்று என்பதால், துணிந்துவிட்டேன். நாம் வரிந்து கொண்ட கொள்கைகளும், அரசியல் பின்புலமும், சூழல் காரணிகளும் நம் தீர்ப்புகளை தீர்மானிக்கும் காரணிகள் - அதை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் இலக்கியங்களை அனுகவேண்டும். அப்பொழுது தான் அக்கவி சொல்லவந்த செய்தியை முழுதாக உள்வாங்க முடியும்.

பலநூல்கள் இருந்தாலும் தற்பொழுது நான் படித்து மகிழ்ந்த ஜந்தினை ஐம்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சங்கம் பெரும்பாலும் நூல்களுக்கு பெயரிடுவதில்லை. தொகுப்பாசிரியர்கள் தற்காலத்தில் அல்லது இடைக்காலத்தில் இட்டபெயர்கள் இவை. அய்ந்து திணைகளுக்கும் பத்து பாடல்கள் வீதம் அய்ம்பது பாடல்கள் = அய்தினை அய்ம்பது.

இது காட்டில் ஆரம்பித்து(முல்லை)(முல்லை-காட்டில் பூப்பது), குறிஞ்சி(மலையும் மலை சார்ந்த இடமும்)(குறிஞ்சி மலையில் பூப்பது - மலரே குறிஞ்சி மலரே- ஏற்காடு-கொடைக்கானல்-கொல்லிமலை பகுதிகளுல் குறிஞ்சி பூக்கிறது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை-தற்பொழுது ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது), மருதம் (மருத மரம் வயலும் வயல் சார்ந்த இடங்களில் வளர்வது), பாலை மற்றும் நெய்தல் என 5 திணைகளுக்கு 10 பாடல்கள். எனவே ஐந்திணை ஐம்பது.

காதலின் சுவை காத்திருத்தல், பிரிதலின் வலியுணர்தல், தலைவனின் வரவை நோக்கி வழிகாக்கும் விழியினள் ஆதல். காதலின் பொருண்மை பெண்களை முன்னிறுத்தியே பாடப்படுகிறது. காலந்தொறும் அவர்கள் காத்திருப்பவர்களாகவும், வினை வழி பிரிந்த தலைவனின் நிலை குறித்து அஞ்சுவது போலவும், அவன் வராமை கண்டு சினங்கொள்வதும், கண்ணீர்விடுவதும், இயற்கையை நோக்கி தன்நிலை கூறி புலம்புவது போலவும் பெரும்பாலும் பாடல்கள் வடிக்கப்படுவது இயல்பு.

இதில் கவிஞரின் கற்பனைத்திறன், புலமை, உவமையின் செறிவு ஆகிய உறுப்புகளின் அடிப்படையில் பாடல்களின் சுவை அமையும்.

இனி திணைக்கு ஒன்று வீதம் 5 பாடல்களை பார்ப்போம். ஆசிரியர் மாறன் பொறையனார்.

திணை: முல்லை (காடும் காடு சார்ந்த இடமும். - அக்காலத்தில் முல்லை காட்டில் ஊன்றி படர்ந்திருக்கும்)
ஒழுக்கம்: ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி!
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீமை கொண்டன தோள்

தலைவன் வினைவழி பிரிந்து சென்றிருக்கிறான். கார்காலத்திற்கு முன்பே வந்து விடுவேன் என உரைத்துச் சென்ற தலைவன் இன்னமும் வந்து சேரவில்லை. தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள்- பணிமொழி மயில் கூவ மலைமேல் வந்தாடும் கார்மேக மழையை காணும்போதெல்லாம் என் தோள்கள் என் கண்ணீரைக் கண்டது. மலைமேல் பொழியும் மேகம் போல் என் கண்ணீர் என் தோள்மீது வழிகிறது.

என்ன ஒரு இலக்கிய சுவை பாருங்கள். மயில் கூவியதற்கு இரங்கி அந்த மழை பொழிகிறது. நான் இங்கு காத்திருக்கிறேன். என்னை தேடி அவர் இன்னமும் வரவில்லை! மஞ்ஞை -மயில்.

குறிஞ்சி: மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம்: புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ- நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா.

முல்லை திணையை சேர்ந்தவன் என்னுடன் கலக்கமாட்டான் என வருத்தப்படாதே மான்விழியாளே, அருவி என்றும் மலைமீது வழியவே விரும்பும், விலகி நிற்காது. அதுபோல தலைவனும் உன்னைச் சேரவே விரும்புவான், தள்ளிநிற்க மாட்டான். :)

புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திருந்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.

பொன்போன்ற பூந்தழை (தாழை-தாழம் பூ) சூடிய அல்குல் பெண்ணே, சாரலுக்கு நாம் காத்திருக்குக்கையில், ஏதே வேலை நிமித்தம் போல்வந்து நம்ம்மிடம் பேசிய தலைவன், நம்மிடம் உண்மையிலே கேட்க எண்ணியது ஒன்றுண்டு. சூழல் கருதி அமைதியாக சென்றுவிட்டார். (நூல் விடுவது - நா இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன், உங்க வீடு இந்த பக்கமா இருக்கு? சரி நேசம்ணி பொன்னையா தெரு எங்க இருக்கு?? :) )

மருதம்: வயலும் வயல் சாந்த இடமும்
ஒழுக்கம்: ஊடலும் ஊடல் நிமித்தமும்

போதார்வண்டு ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறிவயர்ந்து எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறி அதுகாண் எங்கையர் இற்கு.

தூது போகும் தலைவனின் நண்பன் நன்றாக வாங்கி கட்டிக்கொள்கிறான் தலைவியிடம். ஊடல் ஒழுக்கம் என்பதால் தலைவியின் கோபம் கொடிகட்டி பறக்கிறது. (வடிவேலு: திஸ் பிளட்? சேம் பிளட்! )

திணை : பாலை (மணல்வெளி - குறிஞ்சியும் முல்லையும் திரிந்த இடம்)
ஒழுக்கம்: பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

இந்த கதை பல படங்களில் பிய்த்து தொங்கவிடப்பட்ட கதை. இத்துணை மென்மையான இதயங்கொண்ட காதலர் என்னை எப்படி பிரியத் துணிந்தார் என தலைவி பிரியும் காதலன் குறித்து கவலையுறுகிறாள். :(

திணை: நெய்தல் (கடலும் கடல் சாந்த இடமும்)
ஒழுக்கம்: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்.

பிரிவதற்கு முன்பு மகிழ்ந்திருந்த பூம்பொழில் காணும்போதெல்லாம் மனம் அவனை நினத்து ஏங்கியது, வருத்தம் தாங்காமல் நான் கண்சிவக்க அழுதேன். வீங்கிய முகம் கண்ட அன்னை, என்ன ஆயிற்று? எதற்காக அழுதாய் என கேட்க.. நான் கடல் வந்து என் மணல் வீட்டை அழித்தது என்று கூறீனேந் என தலைவி பாடுகிறாள்.

இங்கு பிரிவு கடல் போலவும், அவளின் மகிழ்வு மணல் வீடு போலவும் உவமைபடுத்தப்படுகிறது. கேட்ட அன்னைக்கு சும்மா ஒரு பொய்யை சொல்லி பசப்புகிறாள். பெரும்பாலான காதலின் துன்பம் இவ்வாறாகவே அமைகிறது.

களவொழுக்கம் அக்காலத்தில் இயல்பான ஒன்றென்பதாலும் பெண்கள் மிகவும் கவலைக்குள்ளாகின்றனர். சென்ற காதலன் விரைவில் வந்து கைபிடிக்கவில்லை என்றால், ஊரார் முன் தன் குடும்ப மானம் போய்விடும் மற்றும் உடலும் காட்டி கொடுத்து விடும். எனவே பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இப்போதிருக்கும் அத்துணை இடர்களும் அந்த காலத்திலும் இருந்தது. பெண்களின் கண்ணீர் சங்க இலக்கியம் முழுவதும் இறைந்து கிடக்கிறது.

இலக்கியம் வெறும் சுவை இல்ல. அது வாழ்க்கை. பல்வேறு பெண்களின், ஆண்களின் நிலையை கண்டு உணர்ந்து படைக்கப்பட்ட காலக்குறிப்பு. காதலின் இன்பம், வலி, பிரிவின் வேதனை, இயலாமையின் கோபம் என பண்முக குறிப்புகளை நாம் சங்க இலக்கியத்தில் அறியலாம். இன்றளவிற்கும் அப்பாடல்கள் காட்டும் காதல் உலகம், நம் மனதிற்கு மிக நெருக்கமாய், நம் முன்னேர்கள் பட்ட உயரிய பாடுகளை நமக்கு விளக்கிச்செல்கிறது.

1 கருத்து:

Unknown சொன்னது…

சோதனை

கருத்துரையிடுக