வியாழன், 30 ஜூலை, 2009

கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை

கங்கைகொண்ட சோழபுரம் - தமிழகத்தின் நிகரில் சோழவேந்தனான ராசேந்திர சோழனின் கையெழுத்துப் படைப்பு - (Signature Masterpiece). ராசேந்திரரும் தஞ்சையிலே ஆட்சியை தொடர்ந்திருந்தால் நமக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்ற கலைக்களஞ்சியம் கிடைக்காமலே போயிருக்கும். எதையும் துணிவுடன், தனித்து செய்யும் ராசேந்திரரின் கலைப்பார்வையின் அழகுயல் வெளிப்பாடே. தஞ்சையும் - ககொசோழபுரமும் பலவகையில் ஒருங்கமைவு கொண்டவை. அதில் மிக இன்றீயமையாதது - கடவுளர் சிலைகள் தவிர மற்ற சிலைகளை கருவறையிலோ அல்லது அதன் பிரகார சுவற்றிலோ காணமுடியாது.

கடவுளர்-சிவகணங்கள்-நாயன்மார் அல்லது புராண மாந்தர்கள். ராசராசரோ - ராசேந்திரரோ அல்லது எந்த சோழமன்னர்களோ கோவில் பிரகாரங்களில் செதுக்கப்படவில்லை. அத்துணை விதமான சிவனை ரசிக்கலாம் தஞ்சையில். அழகியலும் கம்பீரமும் ததும்பும் அச்சிலைகள் நம் முன்னோர்களின் நிகரில் திறன். நிகரில் சோழமண்டலம் என்பது காரணப்பெயர் தான் போலும். ககொசோழபுரத்தில் சில சிற்பங்கள் உயிர்பெற்று நம்முன் நிற்பது போலவே தோன்றும். சந்திரசூடேச்வரர்-சிவன் பார்வதி சிலைபோன்ற அழகிய வடிவை நான் வேறெங்கும் கண்டதில்லை.
கல்லென்றால் கல் - கடவுள் என்றால் கடவுள் என குழப்பிய கண்ணதாசன் - கலை என்றால் கலை, நிலை (நிலையானது) என சொல்லிச் செல்லாமல் விட்டார். கடவுள் கால் கிலோ என கேட்கும் நமக்கே அந்த சிலைகளின் மீது காதல் வருமளவிற்கு தன் தறனை அந்தச் சிலையில் விட்டுசென்றிருக்கும் அந்த சிற்பியின் பாதங்கள் என் தலை மேல்!

நிற்க: ககொசோழபுரத்து அழகை மற்றொரு பதிவில் பார்க்கலாம். தலைப்பிற்கு வருவோம்.

கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை என்கவனத்தை ஈர்த்தது. அது ஒரு நாயக்கர் கால சிற்பம். எந்த நாயக்க மன்னன் எனத்தெரியவில்லை - புக்கராயன் அல்லது அவனுக்கு பிறகு வந்த எவராவது இருக்கலாம். கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம் - அவரே சராசரி உயமுள்ள அரசர் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன. இங்கு சிலையின் உயரமும் குறைவே.

அந்த புகைப்படத்தை பாருங்கள்.




From Gangaikonda Chozapuram


From Gangaikonda Chozapuram

பார்த்த உடன் சொல்லி விடலாம் இது ஒரு நாயக்கரின் சிலை. சிவனின் மண்டபம் இது. அவரைச்சுற்றி தேவகணங்கள் ஆடுகின்றன.

இனி ஆராய்ச்சி:

1. நாயக்கர் கால சிலை என்பதன் முதல் அடையாளம் கிரீடம். சோழர்களின் கிரீடத்திற்கு ஈடு இணையே இல்லை இவ்வுலகில். இதற்கு முந்தைய படத்தில் சிவனின் கிரீடத்தை பாருங்கள்!
2. சோழர்களின் ஒவ்வொரு சிலையும் ஒரு வித கலைநுணுக்கத்துடன் விளங்கும். கோயிலில் இருக்கும் ஒவ்வொரு சிலையின் அலங்காரமும் வேறுபட்டிருக்கும் ஆனால் சோழத்தின் அடையாளம் அதில் மிக ஆழமாய் இருக்கும்.
3. இந்த ‘படி’ (அளக்கும் படி போன்ற தலைக்கிரீடம் விஜயநகர மன்னர்களின் அடையாளம்), பல கோயில்களில் கிதேவராயர் அணிந்திருக்க நாம் காணலாம்.
4. சிலை இருக்கும் மண்டபம் சிதைக்கப்பட்டு, இந்த சிலை திணிக்கப்பட்டிருக்கிறது.
5. சிலை பூணூல் அணிந்திருக்கவில்லை.
6. சிலையை சுற்றி சிவகணங்கள் அமர்ந்திருக்கின்றன. அவை அவரை வணங்குகின்றன. (மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது, சிவன் மட்டுமே இறைவன்)
7. வேறெந்த பிரகார மண்டபமும் இப்படி உடைக்கப்பட்டு, சிலை திணிக்கப்பட்டிருக்கவில்லை - அவை முழு-ஆளுயர சிற்பங்கள் - ஒரே கல்லில்- பிரகாரத்தோடு இணைந்திருக்கும்.
8. சிலையின் பீடம் சுவற்றிற்கு வெளியே இருக்கிறது


சோழர்களுக்கு பின்வந்த விஜயநகர பேரரசு பல சோழக்கோயில்களில் தங்களின் வேலையைக் காட்டி இருக்கிறது. இதை நான் கோலார் (ராசேந்திர சோழர் எடுத்த கோலாரம்மா கோயில்), http://eyilnadu.blogspot.com/2009/07/blog-post.html பெங்களூர்(தொம்ளூர் -சொக்கநாத கோயில் - இதை பெருமாள் கோயிலாக மாற்றிவிட்டிருக்கிறார்கள்), தஞ்சை பெரியகோயில் மற்றும் பல கோயில்களில் கண்டிருக்கிறேன். பெரும்பாலான மொட்டை கோபுரங்களின் மேல் ராஜகோபுரம் கட்டியதும் இவர்களே.

இவர்கள் இந்து மன்னர்கள் என்பதால் இத்தோடு சென்றது - இல்லையெனில் கோயில் சூறையாடப்பட்டு சிலைகள் மூக்குடைபட்டிருக்கும்.

ராசேந்திரசோழன் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார் - உலகையே வெற்றிகொண்டு ஊர்திரும்பி தான் கட்டிய கோவிலில் ஒரு நாயக்க மன்னன் வந்து தன் சிலையை திணிப்பான் என்று! ராசேந்திரன் இதை முயன்றிருந்தால் - இலங்கை முதல் மலேசியா, கம்போடியா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் முதல் உள்ள கோயில்களிலெல்லாம் அவரின் சிலை தான் இருந்திருக்கும். நம்ம ஆளுங்க ரொம்ப நல்லவங்க..

இதைவிட பெரிய பயங்கரம் - யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கிறது. அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

சிவன் பார்வதி படம் படுக்கை வசம் எடுக்கப்பட்டு நேராக திருப்பப்பட்டுள்ளதால், அதன் கூர்மை சற்று குறைந்துள்ளது. முடிந்தால் அந்த படத்தை அப்படியே தர முயற்சிக்கிறேன்.

Unknown சொன்னது…

நண்பர்களே,

இப்பொழுது சிவன் படத்தை க்ளிக்கினால், அது என் பிக்காசா பக்கத்திற்கு செல்லும். அங்கு இந்த படத்தை நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

பெரிதுபடுத்தியும் பார்க்கலாம். இது போஸ்டர் சைஸ் - எனவே மிகப்பெரியதாக இருக்கும்.

நன்றி

கருத்துரையிடுக