செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நீநானிருளொளி

பின்னோக்கிச் சென்று
உன்னில் இருத்தல்
என்றாகிவிட்ட வாழ்வில்
நாம் மழைக்கு
ஒதுங்கிய மரங்களை
கண்டடைவது சிரமமாக
இருக்கவில்லை
எப்பொழுதும் நிற்கும்
அதே மரங்களின் மீது
பெய்த மழையை
எதிர்கொள்கிறேன்
எதிர்பாரா அவசர
நாட்களில் முன்போல
புதிராய் தெரிவதில்லை
என்றாவது கலையும்
முன்முடி கோதும்
விரல்களை எனதாக
நினைக்க மறுத்து
தீண்டல் கனவுகளில்
அலைபாய்கிறது
என் பதின்மத்தின்
சொச்சங்கள்
கலைத்த காற்றை
கண்டடைவதும்
எதிர்பாராமல் நடந்து
தொலைக்கிறது
அவ்வப்போது சிலமுறை

முன்பனி காலத்து
பின்மாலைப்பொழுதில்
நாசிநுனியில் பூசிய
குளிரை வெடுக்கென்று
பறித்த இளஞ்சூட்டின்
ஆதியும் அந்தமும்
அறியும் நிமித்தம்
இருளின் மென்மை
எழுதிய வரிகளில்
இடறியமேடுகள்
சமைத்த காலத்தின்
எல்லை எக்காலமும்
நான் கடந்திடமுடியா
பின்முன்மேல்கீழ்
நீநானிருளொளி
கரையும்சுகம்
கலையும்சுயம்
மயிர்கால்கள்
உயிர்பெற்று
வழியும்லயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக